விருதுநகர்: கருணை வேலைக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட அதிகாரி?! – ஆடியோ வெளியானதால் பரபரப்பு!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) பணியாற்றி வருபவர் செல்வராஜ். சமீபத்தில் புதிதாக விருதுநகர் மாவட்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், கருணை அடிப்படையில் பணிக்கேட்டு விண்ணப்பத்தவரிடம் பணி நியமனத்திற்கு ரூ.15,000 லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ விருதுநகர்‌ மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.

அதிகாரி செல்வராஜ்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனுக்குட்பட்ட வளையபட்டி பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த பெண், பணியில் இருக்கும்போதே திடீரென இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து வாரிசு அடிப்படையில் தாயின் பணியினை தனக்கு வழங்குமாறு கேட்டு அவருடைய மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருணைப்பணிக்கு விண்ணப்பித்துள்ளார். சில நிர்வாக காரணங்களால் இந்த பணிநியமனம் தள்ளிப்போடப்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில், கடந்த மாதம் 08.07.2022 அன்று புதிதாக பணியில் சேர்ந்த அதிகாரி செல்வராஜ் அதுவரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைல்களை எல்லாம் புரட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது, கருணை அடிப்படையிலான பணிநியமனம் நிலுவையிலிருப்பதை கவனித்த அவர், சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரின் சகோதரனை தொடர்புக்கொண்டு பணிநியமன ஆணை வழங்க பணம் கேட்டதாக தெரிகிறது.

பணம் தொடர்பாக அதிகாரி செல்வராஜூக்கும், விண்ணப்பத்தாரரின் சகோதரனுக்கும் இடையே நடந்ததாக சொல்லப்படும் போன் உரையாடலின்படி, “ஆர்டர் நாளைக்கு, நாளைகழிச்சிக்கூட வரலாம். இல்ல 10 நாள் கூட ஆகலாம். ஆனா நீங்க ரகசியம் காப்பாத்தனும்” என அதிகாரி பேசுகிறார். அதற்கு, “சரிங்க சார் அமௌண்ட் தான் அதிகமா இருக்குற மாதிரி” என குரலை உள்ளுக்குள் இழுக்கிறார் விண்ணப்பதாரரின் சகோதரன் என சொல்லப்படுபவர்.

அதற்கு மறுமுனையில், “ஆமாங்க வேலை இருக்குதுல்ல.. அதுக்கு செய்ய வேண்டாமா?.. இப்போலாம் சமையலர் வேலைக்கு நீங்க ரூ.5 லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது. ஏன்னா, இது நிரந்தர வேலை. ரொம்ப நாள் பெண்டிங்க்ல கிடந்த உங்க ஃபைல நானாகவே தேடி கண்டுபிடிச்சி உங்களுக்கு போன் பன்றேன்னா அதை புரிஞ்சிக்கனும். கஷ்டப்படுற உங்களுக்கு வேலை கிடைக்கட்டுமேனு தான் நானே உங்ககிட்ட பேசுறேன். அதனால நாளைக்கு வரும்போது 15,000 ஆயிரத்தை எப்படியாவது கொண்டுவந்திருங்க. விஷயம் வெளிய தெரியக்கூடாதுங்க. அதுபோல நீங்க வர்றதை யாருக்கிட்டேயும் சொல்லிட்டு வரக்கூடாது பாத்துக்கோங்க. நாளைக்கு காலையில 8 அல்லது 8.30 மணிக்குள்ள வந்திருங்க” என பேசும் வகையில் உள்ளது அந்த ஆடியோ.

இதுகுறித்து நேர்முக உதவியாளர்(சத்துணவு) செல்வராஜிடம் பேசினோம். “அந்த ஆடியோவுக்கும், எனக்கும் சம்பந்தமில்ல. நான் ரொம்ப கண்டிப்பான ஆபீஸர். அதுபோல, பாவப்பட்டவங்களுக்கு என்னால வேலை கிடைக்கட்டும்னு தான் வேலை செஞ்சிட்டு இருக்கேன். நான் இங்க வந்ததுக்கு பிறகுதான் பெண்டிங்ல இருந்த நிறைய ஃபைல் முடிச்சி கொடுத்திருக்கேன். அந்த ஆடியோவில் தேவையில்லாம மாட்டிவிட்டுடாங்க” என்றார்.

சத்துணவு ஊழியர் சங்கத்தினரிடம் பேசினோம், “இந்த ஆபீசர் புதுசா வேலைக்குனு விருதுநகர் மாவட்டத்திற்கு வந்ததிலிருந்து பணத்து மேலேயே குறியா இருக்கிறதா எங்களுக்கு தகவல் வந்துச்சு. ஒவ்வொரு இடங்களையும் ஆய்வுங்கிற பேர்ல அதுசரியில்ல. இது சரியில்லன்னு சொல்லி 1.000, 1.500 ரூபாய்னு சமையலர் கிட்ட பணம் வசூலிச்சிட்டு போயிருக்கிறார். கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க எங்களால அவ்வளவு பணம் தர முடியாதுன்னு சொல்லவும், 5ஆயிரம் ரூபாய் குறைச்சுக்கோங்கனு சொல்லி 15 ஆயிரம் ரூபா கேட்டுருக்காரு. இது சம்பந்தமான தகவல் எங்களுக்கு கிடைச்சதுமே மற்ற அதிகாரிங்க கிட்ட பேசுனோம். ஆனா மற்ற அதிகாரிகளுக்கும் செல்வராஜ் சார் மேல நல்ல அபிப்பிராயம் இல்ல. அதனால அவங்களும் இதை பெருசா கண்டுக்கல. வேலை கேட்டு விண்ணப்பித்த குடும்பத்துக்கு இந்த கருணைப்பணி ரொம்ப முக்கியமானது. அதனால செல்வராஜ் சார்கிட்ட அமைதியா கேளுங்களு சொன்னோம்.

லஞ்சம்

ஆனா, விண்ணப்பதாரரின் சகோதரனுக்கு போன் செய்து பேசின செல்வராஜ் சார், பணத்தை எடுத்துட்டு வரச் சொல்லி நேரம் குறிச்சிருக்காரு. அவர் கூப்பிட்ட அந்த நாள்ல வெறும் 5000 ரூபாவை மட்டும்தான் அந்த குடும்பத்தால புரட்ட முடிஞ்சது. அதனால அந்த 5 ஆயிரம் ரூபா பணத்தை முன்தொகையா வச்சிக்கோங்கனு சொல்லி செல்வராஜ் சார் கிட்ட அந்த குடும்பத்தினர்கள் கொடுத்திருக்காங்க. இது வெளியில தெரிஞ்ச உண்மை. இதுபோல அவரு பல இடங்களில் சமையலர், உதவி சமையலரையும் அச்சுறுத்தி கட்டாயம் பண வசூலில் ஈடுபட்டுருக்காரு. எனவே, நேர்முக உதவியாளர் செல்வராஜ் மேல் துறைரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கணும்” என்றனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமாரிடம் பேசினோம். “பணி நியமனத்துக்கு லஞ்சம் கேட்டது தொடர்பாக இதுவரையிலும் எனது கவனத்திற்கு புகார்கள் வரவில்லை. இதுதொடர்பான புகார்கள் வரப்பெற்றால் நிச்சயம், அதன்மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.