தமிழ் அறிஞரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன் காலமானார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நெல்லை: தமிழ் அறிஞரும், பேச்சாளரும், காங்கிரஸ் பிரமுகருமான நெல்லை கண்ணன், உடல் நலக்குறைவால் நெல்லையில் நேற்று காலமானார்.
பட்டிமன்றம், இலக்கிய நிகழ்ச்சிகள், ஆன்மிகம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் சிறந்த  பேச்சாளராக திகழ்ந்தவர் நெல்லை கண்ணன் (77). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நகைச்சுவையாகவும், நெல்லை தமிழில் அற்புதமாகவும் பேசக் கூடியவர். தமிழ்க்கடல் என்றும், நெல்லையைச் சேர்ந்தவர் என்பதால் நெல்லை கண்ணன் என்றும் அழைக்கப்பட்டார்.  இவருக்கு தமிழக அரசின் 2021ம் ஆண்டின் இளங்கோவடிகள் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. சமீப காலமாக வயது முதிர்வால் நெல்லை டவுனில் உள்ள  தனது இல்லத்தில் ஓய்வெடுத்து, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவரது இல்லத்தில் நெல்லை கண்ணன் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று மதியம் அங்கு வந்து நெல்லை கண்ணன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இன்று அவரது உடல் தகனம் நடக்கிறது. இவரது மூத்த மகன் சுரேஷ் கண்ணன் என்ற சுகா திரைப்பட இயக்குநராகவும், மற்றொரு மகன் ஆறுமுகம் கண்ணன் சென்னையில் பணிபுரிந்தும் வருகின்றனர். இது தவிர 2 பெண், ஒரு ஆண் வளர்ப்பு பிள்ளைகள் உண்டு. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், கலெக்டர் விஷ்ணு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.