சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்ததை நம்பமுடியவில்லை: தாக்கியவர் பேட்டி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க்: ‘சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை’ என அவரை கத்தியால் தாக்கிய நபர் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, ‘தி சட்டானிக் வெர்சஸ்’ என்ற நாவலை, 1988ல் வெளியிட்டார். இதற்கு, முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ருஷ்டியை படுகொலை செய்ய வேண்டும் என, அப்போதைய ஈரான் அதிபர் அயதுல்லா கோமேனி பகிரங்கமாக அறிவித்தார். ருஷ்டியை படுகொலை செய்ய நடந்த பல்வேறு முயற்சிகளில், அவர் உயிர் தப்பினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் அமெரிக்க குடியுரிமை வைத்துள்ள ருஷ்டி, இரு நாடுகளிலும், மாறி மாறி வசித்து வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, மேடை ஏறிய நபர், சல்மான் ருஷ்டியை கத்தியால் பலமுறை குத்தினார். இதில், ருஷ்டியின் கழுத்து, வயிறு மற்றும் கையில் படுகாயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கத்திக் குத்தில், அவரது கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கண் மற்றும் கையில் நரம்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். ருஷ்டியை தாக்கிய, ஹாதி மாட்டர் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

latest tamil news

இந்நிலையில், அவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சல்மான் ருஷ்டி உயிர்தப்பிய செய்தியை அறிந்து ஆச்சரியம் ஏற்பட்டது. அவரது சர்ச்சை புத்தகத்தின் 2 பக்கங்களை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். அவர் நல்லவர் கிடையாது. அவரை எனக்குப் பிடிக்கவில்லை. அவர் நியூயார்க் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை அறிந்து கொண்ட நான், அங்கு சென்று அவரை கத்தியால் தாக்கினேன். அவர் இஸ்லாம் மீது தாக்குதல் தொடுத்ததால், அவரை நானாகத்தான் தாக்கினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.