டெண்டர்களில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரம் உள்ளது; அறப்போர் இயக்கம் ஐகோர்ட்டில் பதில் மனு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு அரசு துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு சட்ட ரீதியாக வழக்குகளை தொடுத்து வருகிறது.

அந்த வகையில், 2019 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், நெடுஞ்சாலைத் துறை முறைகேடுகளால் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டது.

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக அறப்போர் இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி, அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். மேலும், மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நெடுஞ்சாலைத் துறையில் விதிமுறைகளை பின்பற்றாமல் டெண்டர் வழங்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகாரை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது அவதூறு இல்லை எனவும் அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் அளித்ததற்காக அவதூறு வழக்கு தொடர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உட்பட பல உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பு இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால், மான நஷ்ட ஈடு கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.