ட்ரீட்மெண்ட் முடிஞ்சுதா? இல்லையா? சேலத்தில் விடாத போலீஸ்- கதறிய கே.பி.ராமலிங்கம்!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் பாரத மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சென்றுள்ளனர். அப்போது ஆலயம் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்தது. இதையடுத்து பூட்டை உடைத்து பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதுதொடர்பாக மண்டப காப்பாளர் சரவணன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கே.பி.ராமலிங்கம், மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள கே.பி.ராமலிங்கம் வீட்டில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் ரத்த கொதிப்பு அதிகமானதால் உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சை பெறுவதற்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று பென்னாகரம் நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தற்போது உடல்நலம் தேறி வந்த நிலையில், கே.பி.ராமலிங்கத்தை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக கூறி சிறைக்கு வர மறுத்துள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து டிஸ்சார்ஜ் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் கே.பி.ராமலிங்கத்தை போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளன. ஏனெனில் அவர் படுக்கையில் கையில் ட்ரிப்ஸ் பிளாஸ்திரிகளை கூட கழட்டாமல் படுத்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர் முழுவதும் குணமடைந்து விட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் முழுவதும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாரா? ஏன் ட்ரிப்ஸ் ஏற்றும் பிளாஸ்திரிகளை கூட அகற்றாமல் போலீசார் கூட்டி செல்ல அனுமதி அளித்தனர்.

இல்லை முழுவதும் குணமடைந்து விட்டு சிறைக்கு செல்ல பயந்து வேண்டுமென்றே வர மாட்டேன் என்று கதறினாரா? என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நீங்கள் எங்களை மிரட்டலாம். கார்னர் செய்யலாம். டார்ச்சர் செய்யலாம்.

உங்கள் சர்வாதிகாரப் போக்கு எல்லாவற்றையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிப்பதை குற்றம் என்று இந்த அரசு சொல்லுமேயானால் அதை மீண்டும் செய்ய நாங்கள் அஞ்ச மாட்டோம். குடும்ப ஆட்சியின் அடுத்த பரிமாணமே சர்வாதிகாரம். உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம், எங்களைத் துன்புறுத்தலாம்.

உங்கள் அடக்கு முறையை மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை சிம்மாசனத்திலிருந்து இறக்கும் வரை மக்களின் குரலாக எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அதில் கே.பி.ராமலிங்கம் கைது செய்து அழைத்து செல்லப்படும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இது இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.