‘பொய்த் தகவல்களைப் பரப்பும் சரவணனை கைது செய்க’ – மதுரை காவல் ஆணையரிடம் பாஜக புகார்

சென்னை: பாஜகவுக்கு எதிரான பொய் தகவல்களை பரப்பும் மருத்துவர் சரவணனை கைது செய்ய வலியுறுத்தி மதுரை காவல் ஆணையரிடம் பாஜக மாவட்ட தலைவர், நிர்வாகிகள் இன்று புகார் மனுக்கள் அளித்தனர்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் கார் மீது காலணி வீசிய புகாரில் 40-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மகளிரணி நிர்வாகிகள் 3 பேர் உட்பட இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை தேடுகின்றனர்.

இந்த வழக்கில் மதுரை நகர் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் சரவணனை கைது செய்ய வலியுறுத்தி மதுரை புறநகர், மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்திரன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், துணைத்தலைவர் ஜெயவேல், புறநகர் பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் பெருமாள், செயலர் கே.என்.ஆதிகணேசன், பொதுச் செயலர் ஆனந்த ஜெயம், ஊடகப் பிரிவு தலைவர் செல்வ மாணிக்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலர் அமிர்தராஜ் உள்ளிட்டோர் காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் மனுக்கள் அளித்தனர்.

அவற்றில் கூறியிருப்பதாவது: ராணுவ வீரர் லட்சுமணன் சொந்த ஊருக்கு சென்று அஞ்சலி செலுத்துவோம் என சொன்னபோது, அனுமதி வாங்கிவிட்டதாக விமான நிலையத்திற்கு சரவணன் வரவழைத்தார். இதனால் மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்தபோது, நடந்த பிரச்னை குறித்து சரவணனிடம் கேட்டபோது, ‘பதிலுக்கு பதில் செஞ்சிட்டேன்’ எனக் கூறி இருக்கிறார்.

தொடர்ந்து பத்திரிகை, டிவிக்களிலும் அமைச்சரை விமர்சித்து அவர் பேசினார். இருப்பினும், நள்ளிரவில் நிதியமைச்சரின் வீட்டுக்குச் சென்று பாஜக பற்றி முன்னுக்கு பின், முரணாக ஆதாரமின்றி பேசி, மதக் கலவரத்தை தூண்டும் விதமாக சரவணன் நடந்து கொண்டார். தொடர்ந்து 10 நாளாகவே பொதுமக்களை குழப்பும் விதமாகவும், தேசத்துக்கு எதிரான செயலிலும் ஈடுபட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சரவணனை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் கூறுகையில், ”பாஜகவை விட்டு வெளியேறிய சரவணன், கட்சி பற்றி தவறான அவதூறு தகவல்களை பரப்புகிறார். அவரது தவறை மறைக்க பொய் சொல்கிறார். சிறுபான்மை மக்களிடம் குழப்பம் ஏற்படுத்துகிறார். அமைச்சர் கார் மீதான தாக்குதலில் அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீஸ் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனாலும், அவர் தொடர்ந்து சேனல்களுக்கு பேட்டி அளிக்கிறார். அமைச்சர் கார் மீது நடத்திய தாக்குதல் கண்டனத்துக்குரியது என்றாலும், அமைச்சரே பொதுமக்களை திரட்டி அஞ்சலி செலுத்தி இருக்கவேண்டும். அமைச்சர் கார் தாக்கப்பட்ட சம்பவத்தில் 30 பாஜகவினரை போலீஸ் தேடுவதாக கூறுகிறது. அவர்கள் குறித்த பட்டியல் கொடுத்தால் ஒத்துழைக்க தயாராக உள்ளோம். மதக் கலவரத்தை தூண்டும் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.