ரசாயன கலவைக்கு தடை விதிப்பு எதிரொலி களிமண் சிலை வடிக்கும் பணி தீவிரம்: களைகட்டுகிறது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

பொள்ளாச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, ரசாயன கலவைக்கு தடைவிதிப்பால் பொள்ளாச்சி பகுதியில் களிமண் சிலை வடிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் விநாயகர் சிலைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், இப்பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், வடக்கிபாளையம், ஆர்.பொன்னாபுரம், கோபாலபுரம், ஆவல் சின்னாம்பாளையம், அங்கலகுறிச்சி, கோட்டூர், அம்பராம்பாளையம், நெகமம், கோமங்கலம், பூசாரிபட்டி மற்றும் நகர் பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும், ஆர்டர் மூலம் களிமண்ணால் விநாயகர் சிலை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டும், அரை அடி முதல் சுமார் 3 அடிவரையில் சிலைகளை வடிக்கும் பணியில் தொழிலாளர்கள் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளனர். சிலை வடிக்கும் பணி பூர்த்தி அடைந்த பின்னர், அதனை வெயிலில் உலரவைத்து, வர்ணம் பூசி, பின் குறிப்பிட்ட விலை நிர்ணயித்து மார்க்கெட்டுக்கு அனுப்புவர்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி பகுதியில் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுவோரில் பலரும், விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண்ணால் சிலை செய்து விற்பது வழக்கம். ஆனால் தற்போது, களிமண் தட்டுப்பாடு அதிகளவில் இருப்பதால், இந்த ஆண்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் சிலைகள் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் விநாயகர் சிலை ஆர்டர் வெகுவாக குறைந்திருந்தது. இம்முறை, பல்வேறு இடங்களில் களிமண்ணாலான சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. அரை அடி முதல் 3 அடிவரையிலான சிலைகள், ரூ.150 முதல் ரூ.2500 வரையிலும், தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது’’ என்றனர்.

இந்நிலையில் நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண், சுண்ணாம்பு அல்லது மரவள்ளிக்கிழங்கு மாவால் மட்டுமே செய்யப்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கரைக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ் டிஸ்டம்பர், பிளாஸ்டிக் பெயின்ட் வார்னீஸ் உள்ளிட்ட ரசாயன கலவைகள் கொண்டு சிலை செய்ய கூடாது என மாசுகட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.  இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், தண்ணீரில் கரையும் வகையிலான சிலைகள் மட்டுமே இருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற ரசாயன கலவை மூலம் செய்யப்படும் சிலைகளுக்கு அனுமதி கிடையாது.

இதுகுறித்து சிலை பிரதிஷ்டை செய்பவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் ரசாயன கலவை கொண்டு செய்யப்படுகிறதா? என கண்காணித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். இதனை மீறினால், சிலை பறிமுதல் செய்யப்படுவது மட்டுமின்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்தனர்.

இதையடுத்து ரசாயன கலவைக்கு தடை விதிப்பு எதிரொலியாக மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண்ணில் விநாயகர் சிலைகளை தயாரிப்பில் மும்முரம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ரசாயன சிலைகள் பயன்பாட்டை முழுமையாக கண்காணித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறவே கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இதன்மூலம் பாரம்பரியமாக களிமண்ணில் சிலை வடிக்கும் தங்களது குடும்பங்களில் ஏற்றம் பிறக்கும் எனவும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.