அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குநர் ஒப்புதல் இல்லாமலும் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் செயல்பட்டு வந்த சாய் விஹார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குநர் ஒப்புதலும் இல்லாமலும் செயல்பட்டு வருவதாக கூறி, பள்ளியை மூன்று நாட்களில் மூடும்படியும், மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் சேலத்தில் உள்ள வட்டார கல்வி அதிகாரி, ஆகஸ்ட் 2ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பள்ளி சார்பில் அதன் நிறுவனர் குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, சேலத்தில் பல பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குநர் ஒப்புதல் இல்லாமலும் நீண்ட காலம் இயங்கி வருவதாகவும், 2011 முதல் அங்கீகாரம் பெற முயற்சித்து வரும் நிலையில் இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், அங்கீகாரம் கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் பள்ளி நிறுவனர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி பள்ளிக்கல்வித் துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அதேசமயம், சேலத்தில் அங்கீகாரமும், நகரமைப்பு திட்ட இயக்குநர் ஒப்புதலும் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.