இரண்டு அல்ல; ஒன்று மட்டும்தான் பாங்காங் ஏரி பகுதியில் சீனா பிரமாண்ட பாலம்: 100 அடி அகலம் கொண்டது செயற்கைக்கோள் மூலம் உறுதி

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் சீனா 2 பாலங்கள் கட்டி வருவதாக கூறப்பட்ட நிலையில், அங்கு அது ஒரு பாலத்தை மட்டுமே கட்டுவதாகவும், அது மிகவும் பெரியது என்றும் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் திசோ ஏரியை 2 ஆண்டுகளுக்கு முன் சீன ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது, இந்திய ராணுவ வீரர்கள் அதை தீரத்துடன் முறியடித்தனர். இருப்பினும், இந்த ஏரிக்கு அருகில் உள்ள அசல் கட்டுப்பாடு எல்லை கோட்டுக்கு அருகே, ராணுவ தளவாடங்களை எடுத்து செல்வதற்காக சீனா ராணுவம் 2 பாலங்களை கட்டி வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

இந்நிலையில், சீனா கட்டும் பாலம் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தை கடந்த 15ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த  ‘பிளானட் லேப்ஸ்’ என்ற நிறுவனம் மிக துல்லியமாக எடுத்துள்ளது. இதில், பாங்காங் ஏரி பகுதியில் சீனா 2 பாலங்களை கட்டவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதற்கு மாறாக, மிகப்பெரிய பாலத்தை அது கட்டி வருவது உறுதியாகி இருக்கிறது. பாலம் கட்டுமான பணி இன்னும் முடியவில்லை. இந்த பாலத்தின் அகலம் 100 அடிக்கு மேல் உள்ளது. இதன் மூலம், பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ராணுவ உபகரணங்களை சீன ராணுவத்தால் எளிதாக இப்பகுதிக்கு கொண்டு வர முடியும். பாலத்தின் தெற்கு முனையில் சிறிது இடைவெளி இருப்பதையும் புகைப்படங்கள் காட்டுக்கின்றன.
எல்லைக்கு அருகே ரூடாக் என்ற இடத்தில் சீனாவின் மிகப்பெரிய விமானப்படை தளம் உள்ளது. இதை இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்படுவதாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.