பலாத்கார குற்றவாளிகள் விடுதலை பின்னணியில் குஜராத் தேர்தல்.. உருது ஊடகங்கள் சந்தேகம்

காந்திநகர்: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து குஜராத்தின் உருது பத்திரிகைகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன.

Recommended Video

  அம்மாநில செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் இந்த விடுதலை குறித்து அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில், உருது செய்தி ஊடகங்கள் தங்களது மாற்றுக் கருத்தை தைரியமாக பதிவு செய்துள்ளன.

  From Bilkis Bano case to Prime Minister critical Urdu press; An analysis

  ‘இன்குலாப்’ உள்ளிட்ட உருது செய்தி பத்திரிகைகள் குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து முதல் பக்கத்திலேயே காட்டமாக எழுதியிருந்தன.

  யார் இந்த ‘உருது பத்திரிகைகள்’? “குஜராத் தேர்தல் களத்தில் வாக்குகளை அள்ள மாநில அரசு இம்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறதா?” என தைரியமாக எழுதிய பத்திரிகைகளின் பின்னணி என்ன என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வன்முறை வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். அப்போது 19 வயதான பில்கிஸ் பானு எனும் இளம் பெண் கூட்டு பாலியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். மட்டுமல்லாது அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.

  இதில் பானுவின் 3 வயது கைக்குழந்தையும் அடங்கும். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனையளித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து 76வது சுதந்திர தினத்தையொட்டி மாநில அரசு இந்த 11 பேரையும் விடுவித்தது. இது குறித்து தனது அதிருப்தியை பானு வெளிப்படுத்தி இருந்தார். விடுதலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த பாஜக எம்எல்ஏ ஒருவர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியிருந்தார். இது எல்லாமும் பெரும் அரசியல் சலசலப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

  இந்த சம்பவம் குறித்து உருது பத்திரிகையான ‘இன்குலாப்’ விரிவாக அலசி ஆராய்ந்துள்ளது. குற்றவாளிகளின் விடுதலை குறித்து ஆகஸ்ட் 17ம் தேதியன்று ‘இன்குலாப்’ ஒரு காட்டமான தலையங்கத்தை எழுதியிருந்தது. அதில், “பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் பெண்களை மதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் குஜராத் மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் கொள்கையானது இதற்கு முரணாக உள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் பாஜக அரசு அரசியல் லாபம் ஈட்ட முயற்சிகிறது. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் அரண்மனையிலிருந்து மோடி விடுத்த அழைப்பை மத்திய அரசு தலையிட்டு மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

  இந்த சம்பவம் குறித்து ‘இன்குலாப்’ மட்டுமல்லாது ‘ரோஸ்னாமா ராஷ்ட்ரிய சஹாரா’ எனும் மற்றொரு உருது பத்திரிகையும் கடும் விமர்சனத்தை தெரிவித்தது. ஆகஸ்ட் 18ம் தேதி ‘சஹரா’ தனது முதல் பக்கத்தில் குஜராத் அரசு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனத்தை அச்சிட்டிருந்தது ‘சஹாரா’. அதேபோல, குற்றவாளிகளின் விடுதலை சட்டவிரோதமானது என்றும், இதற்கு மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதில் சொல்ல வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ‘பவன் கேரா’ கூறியதையும் ‘சஹாரா’ மேற்கோள் காட்டியிருந்தது.

  அதே நாளில் மற்றொரு உருது தினசரி நாளிதழான ‘சியாசட்’, “பிரதமர் மோடியின் வார்த்தைகள் அவரது செயல்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை முழு தேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது” எனும் ராகுல் காந்தியின் டிவீட்டை மேற்கோள்காட்டி அச்சிட்டிருந்தது. இதற்கு அடுத்த நாளில் அதாவது ஆக.19ம் தேதி இந்த நாளிதழ் தனது முதன்மை பக்கத்தில் பில்கிஸ் பானுவின் அறிக்கையை முழுமையாக அச்சிட்டிருந்தது. இதற்கு முன்னதாக ஆக.15ம் தேதியன்று வெளிட்ட தலையங்கத்தில், “கிலாபத் இயக்கம், பட்டு கடித இயக்கம், உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் ஆகியவை மக்களின் நினைவிலிருந்து பெருமளவில் மறைந்துவிட்டன. இது புதிய தலைமுறையினருக்கு மீண்டும் நினைவூட்டுவது கடினமாக்கியுள்ளது” எனவும் கூறியிருந்தது.

  எனவே, “நாட்டின் கடந்த கால பெருமை மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்க முஸ்லிம் அமைப்புகள் விடுமுறை வகுப்புகளை நடத்தினால் நல்லது” என்றும் தனது தலையங்கத்தில் ‘சியாசட்’ தெரிவித்திருந்தது. மேற்குறிப்பிட்ட ரோஸ்னாமா ராஷ்டிரிய சஹாரா மற்றும் இன்குலாப் ஆகிய இரண்டு பத்திரிகைகளும், சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரின் சுதந்திர தின உரைகளை அச்சிட்டிருந்தன.

  ‘இன்குலாப்’ பத்திரிகையானது ‘புதிய இந்தியா’ மற்றும் ‘பழைய இந்தியா’ ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை எடுத்துக்காட்டும் ஒரு தொடர் தலையங்கத்தை வெளியிட்டது. ஆகஸ்ட் 18 அன்று வெளியிடப்பட்ட தலையங்கங்களில் “புதிய இந்தியாவைக் கட்டமைக்க நாங்கள் உறுதியாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் பழைய இந்தியாவின் பிரச்சினைகள் கட்டுப்படுத்த முடியாதவை” என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், “சட்டம் தொடர்ந்து தனது பாதையில் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பல சிக்கல்களை அது தீர்க்க வேண்டும். ஆனால் தற்போது சட்டமே சிக்கலில்தான் உள்ளது. சட்டத்தை சிக்கலில் இருந்து பாதுகாக்க குற்றமற்ற சமூகத்தை வளர்ப்பது அவசியம், எனவே குற்ற விகிதங்கள் மிகக் குறைவாகவும் மிதமாகவும் இருக்கும் நாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

  மக்கள் ஒருவருக்கொருவர் உரிமைகளைப் பற்றி கவலைப்படுவதற்கும் தங்கள் கடமைகளைச் செய்வதற்கும் கடமைப்பட்டிருக்கும் வகையில் சமூகம் ஒழுங்கமைக்கப்பட்ட நாடுகள் உள்ளன. குடிமக்களுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே உரிமைகள் மற்றும் கடமைகள் கற்பிக்கப்படும்போது, அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒழுக்கமாக இருக்கும் போது பொறுப்பு உணர்வு உருவாகிறது” என கூறியிருந்தது. மேற்குறிப்பிட்ட இந்த பத்திரிகைகள் மேலும் சில விஷயங்கள் குறித்தும் தீவிரமாக விவாதித்துள்ளன.

  அதாவது பாஜகவின் நாடாளுமன்ற குழு மற்றும் மத்திய தேர்தல் கமிட்டி குழு ஆகியவை மாற்றியமைக்கப்பட்டது குறித்தும் இந்த பத்திரிகைகள் விரிவாக விவாதித்துள்ளன. புதிய நாடாளுமன்ற குழுவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை குறிப்பிட்டு “இதுபோன்ற மாற்றங்கள் மாநிலங்களவையில் ஏற்படுத்தக்கூடிய எந்த விளைவையும் பொருட்படுத்தாமல், நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மட்டுமே செய்யப்பட்டதாகத் தெரிகிறது” என்று ‘சியாசட்’ பத்திரிகை தலையங்கம் தீட்டியுள்ளது.

  மேலும் ரோகிங்யா இஸ்லாமியர்கள் குறித்தும், சல்மான் ருஷ்டியின் புத்தகத்தின் மீதான தடை குறித்தும் இந்த பத்திரிகைகள் விரிவாக விவாதித்துள்ளன. மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் ஏதும் இன்றி எழுதி வரும் பத்திரிகைகளுக்கு மத்தியில் குஜராத் மாநிலத்திலிருந்தே மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ‘இன்குலாப்’ போன்ற உருது பத்திரிக்கைகள் மக்களிடம் சமீப நாட்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

  Source Link

  Leave a Comment

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.