மும்பையில் மீண்டும் வெடிகுண்டு வெடிக்கும்: போலீசுக்கு வந்த வாட்ஸ்அப் பதிவால் பரபரப்பு

மும்பை: மும்பை போலீசுக்கு வந்த வாட்ஸ் அப் பதிவில்,  மும்பையில் மீண்டும் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போக்குவரத்து காவல்துறைக்கு நேற்று வாட்ஸ்அப் பதிவு ஒன்று வந்தது. அதில், ‘மும்பையில் நடந்த தாக்குதல் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கப் போகிறது. நாங்கள் இதனை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். மொத்தம் ஆறு பேர் இந்த சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். எங்களது இருப்பிடம் உங்களுக்கு வெளிநாட்டை காண்பிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில் மும்பை வெடிகுண்டு தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப் குறித்தும், சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா குமார் கொலையான செய்தியும், பஞ்சாப் பாடகர் சித்து மூசே வாலா கொல்லப்பட்ட சம்பவம் குறித்த குறிப்புகளும் உள்ளன. அதேபோல் அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் குறித்த தகவல்களும் உள்ளன. மேற்கண்ட வாட்ஸ் அப் தகவல் குறித்து மும்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கும் மேற்கண்ட தகவல் பகிரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், மும்பை போலீசுக்கு வந்த செய்தி பாகிஸ்தானில் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 10  லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பைக்கு வந்து குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றினர். கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 18 போலீசார் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். உயிருடன்  பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல்  கசாப், கடந்த 2012ல் தூக்கிலிடப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.