மைத்துனருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிஹார் அமைச்சர் தேஜ் பிரதாப்

பாட்னா: பிஹாரில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த புதன்கிழமை தேஜ் பிரதாப் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க லாலு மகளும் மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதியின் கணவர் சைலேஷ் குமார் அலுவலகம் வந்துள்ளார்.

அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த தேஜ் பிரதாப் தனது மைத்துனரை காத்திருக்கச் சொல்லாமல் அவரை அழைத்து தனது அருகிலேயே கூட்டம் முடியும் வரை அமரச் செய்தார்.

பிறகு கூட்டம் தொடர்பான புகைப்படங்களை தேஜ் பிரதாப் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சைலேஷ் குமாரும் இடம்பெற்றிருக்கும் இந்தப் புகைப்படங்களால் நிதிஷ் அரசுக்கு தருமசங்கடம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் கூறும்போது, “சாதியவாதம், சிறுபான்மையினரை திருப்திபடுத்துதல் என ஆர்ஜேடி அரசியல் செய்துகொண்டிருந்தாலும் குடும்ப நலனை மேம்படுத்துவதே அந்தக் கட்சியின் அடிப்படை நோக்கமாகும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.