லம்போர்கினி கார் வாங்கிய பஹத் பாசில்

மலையாள திரை உலகை சேர்ந்த இளம் நடிகர்களில் துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோர் விதவிதமான விலையுயர்ந்த கார்களை வாங்குவதிலும் அதிவேகத்தில் கார்களை ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்டவர்கள். இந்த நிலையில் இந்த பட்டியலில் நடிகர் பஹத் பாசிலும் இணைந்துள்ளார். தற்போது ரூ 3.15 கோடி மதிப்பிலான புதிய லம்போர்கினி உருஸ் என்கிற காரை பஹத் பாசில் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் வழக்கமாக தனது புதிய காருடன் புகைப்படங்களை வெளியிடும் பகத் பாசில் இந்தமுறை அப்படி படங்கள் எதையும் சோசியல் மீடியாவில் வெளியிடவில்லை.

காரணம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் 1.9 கோடி மதிப்புள்ள போர்ஸ்சே 911 கரெரா எஸ் என்கிற காரை வாங்கி, தன் மனைவி நஸ்ரியாவுடன் அந்த கார் முன்பாக நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். அது கொரோனா தாக்கம் நிலவிய சமயம் என்பதால், சோசியல் மீடியாவில் பலரும் “நாடே கொரோனா தாக்கம் காரணமாக தத்தளித்து வரும் வேளையில், இவ்வளவு ஆடம்பரமான கார் வாங்குவது அவசியமா..? அந்த தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கலாமே” என்று கருத்துக்களை பதிவிட்டு அவரை சங்கடத்திற்கு ஆளாக்கினார்.

அதற்கு முன்பாக கடந்த 2017ல் விலை உயர்ந்த பென்ஸ் காரை வாங்கிய பஹத் பாசில் வரி ஏய்ப்பு செய்வதற்காக அதை புதுச்சேரியில் பதிவு செய்தார் என வருமானவரி துறையினர் வழக்கு பதிவு செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே தற்போது தான் வாங்கியுள்ள புதிய கார் குறித்த புகைப்படங்களையும் விவரங்களையும் அவர் சோஷியல் மீடியாவில் வெளியிடவில்லை என்று சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.