கியான்வாபி வழக்கு தாமதம் – முஸ்லிம் தரப்புக்கு அபராதம்

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தில் உள்ள சிங்கார கவுரி அம்மன் மற்றும் பிற கடவுள்களை வழிபடும் உரிமை கோரி 5 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா மஸ்ஜித் (ஏஐஎம்) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வாஸ் கடந்த மே 20-ம் தேதி விசாரிக்கத் தொடங்கினார். மே 24 – ஜூலை 12 இடையே 4 நாட்களுக்கு ஏஐஎம் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். அதன் பிறகு ஜூலை 21 வரை, பெண்கள் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்வாதம் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஏஐஎம் தரப்பில் அதன் மூத்த வழக்கறிஞர் அபே நாத் யாதவின் மரணம் காரணமாக அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தயாராவதற்காக 10 நாள் அவகாசம் கேட்டு ஏஐஎம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வாஸ் அதிருப்தி தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நடைபெற்று வரும் இந்த வழக்கை தாமதப்படுத்தியதற்காக ஏஐஎம் தரப்புக்கு ரூ.500 அபராதம் விதித்தார். வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.