சிக்ஸர்களை பறக்கவிட்ட சாம்சன்! ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா



ஜிம்பாப்வேயை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

43 ஓட்டங்களுடன் 3 கேட்ச்களை பிடித்த சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்  

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹராரேயில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் விக்கெட்டுகளை, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஜிம்பாப்வே அணி, 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது களமிறங்கிய ரியான் பர்ல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுறையில் சியான் வில்லியம்ஸ் பொறுப்பான ஆட்டத்தை ஆடி, 42 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆனதால், ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு சுருண்டது. இறுதிவரை களத்தில் நின்ற ரியல் பர்ல் 39 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ஷரத்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ், பிரசித், குல்தீப், ஹூடா மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ராகுல் 5 பந்துகளில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து தவான் 33 ஓட்டங்களும், கில் 33 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.

இஷான் கிஷன் 6 ஓட்டங்களில் அவுட் ஆனார். தீபக் ஹூடா 25 ஓட்டங்கள் விளாசினார்.

மறுமுனையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன், இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

வெற்றி இலக்கை இந்தியா 25.4 ஓவர்களில் எட்டியது. சாம்சன் 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி 22ஆம் திகதி நடக்க உள்ளது.        





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.