டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் கும்பல் சிக்கியது: சென்னையில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்தது அம்பலம்

புதுடெல்லி: போலி பாஸ்போர்ட், விசாக்களை தயாரித்து கொடுத்த கும்பலை டெல்லி விமான நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பல் சென்னையில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்தது அம்பலமாகி உள்ளது. தலைநகர் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய போலீசார் விமான நிலையம் வந்த பயணிகளிடம் வழக்கமான தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மோசடி செயல்களில் ஈடுபட்ட கும்பலிடம் இருந்து 325 இந்திய பாஸ்போர்ட்கள், கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட  பல நாடுகளின் 175 போலி விசாக்கள் மற்றும் இவ்விவகாரத்தில் தொடர்புடைய ஐந்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மும்பையை சேர்ந்த ஜாகிர் யூசுப் ஷேக் என்பவன், மராத்தி மொழியின் பல வெப் தொடர்களில் பணத்தை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய போலீஸ்  டிசிபி தனு சர்மா  கூறுகையில், ‘கடந்த ஜூன் மாதம் ரவி ரமேஷ் என்பவர் குவைத் நாட்டிற்கு போலி பாஸ்போர்ட் மூலம் சென்றது தெரியவந்தது. இதையடுத்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. ரவி ரமேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜமில் பிக்சர்வாலா, ஜாகிர்  யூசுப் ஷேக், சஞ்சய் ஆகியோர் போலி பாஸ்போர்ட் சப்ளை செய்து வருவது தெரிந்தது.  மும்பையில் இருந்து செயல்படும் இவர்கள், அரை மணி நேரத்தில் எந்த நாட்டின் பாஸ்போர்ட்டையும் தயாரித்து கொடுத்துவிடுவார்கள். அதற்காக எந்த நாட்டின் முத்திரைகளையும் இவர்களால் தயாரிக்க முடியும். அதற்கான நவீன இயந்திரத்தையும் வைத்துள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பலருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்துள்ளனர். இதற்காக ரூ.60 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை வசூலித்துள்ளனர். கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் போலி விசாக்கள், 325 இந்திய பாஸ்போர்ட்கள், பல்வேறு நாடுகளின் 1,200க்கும் மேற்பட்ட போலி முத்திரைகள், 11 சர்வதேச ஓட்டுநர் அனுமதிகள், 75 பாஸ்போர்ட் ஜாக்கெட்டுகள், 17 ஆதார் அட்டைகள், 12 கலர் பிரிண்டர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும், சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்துள்ளனர். போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரிப்பதில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வழக்கில் மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படலாம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.