தூத்துக்குடி துப்பாக்கிசூடு: அறிக்கையை மறைக்கிறதா அரசு? டிடிவி சரமாரி கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் 13 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதுகுறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் எவ்வித வழிமுறைகளையும் அலுவலர்கள் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுதொடர்பாக ட்வீட் போட்டுள்ளார். அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தி.மு.க அரசு மௌனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

”இந்த விசாரணை அறிக்கையில், காவல்துறை அதிகாரிகள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும், அவர்களை தி.மு.க அரசு காப்பாற்ற முயல்வதாகவும் வெளிவரும் செய்திகள் உண்மையா?”

”காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?”

”தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிடுவதுடன், அதில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”

தி.மு.க அரசு இதனை செய்யுமா? அல்லது வழக்கம் போல இப்பிரச்னையிலும் இரட்டை வேடம் போடப் போகிறார்களா?” என இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.