'பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் மணீஷ் சிசோடியா!' – அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்!

“பாரத ரத்னா விருதுக்கு தகுதியானர் மணீஷ் சிசோடியா” என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 27 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக, இந்த முறையும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி படு வேகமாக பணியாற்றி வருகிறது. பாஜகவுக்கு மாற்று ஆம் ஆத்மி எனக் கூறி வரும் அக்கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு கட்சி கலந்து கொள்ளும் அவர், குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படும் என, இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட மக்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளை வெளியிட்டு மக்களை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இருவரும் குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

குஜராத் மக்கள் அனைவருக்கும் இலவச மற்றும் சிறந்த சுகாதார சிகிச்சைகளை நாங்கள் வழங்குவோம். டெல்லியில் அமைந்துள்ள மொஹல்லா கிளினிக்குகளை போன்று, நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுகாதார கிளினிக்குகள் திறக்கப்படும். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவோம். தேவைப்பட்டால் புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படும்.

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அரசு பள்ளிகளில் சீர்திருத்தங்களை செய்துள்ளார். 70 ஆண்டுகளில் பிற கட்சிகள் செய்ய முடியாதவற்றை அவர் செய்துள்ளார். அது போன்ற நபர், பாரத ரத்னா விருது பெற வேண்டும். பாரத ரத்னா விருது பெற மணீஷ் சிசோடியா தகுதியானவர். நாட்டின் ஒட்டுமொத்த கல்வி திட்டமும் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு எதிராக சிபிஐ சோதனையை அவர்கள் நடத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.