திமுக அரசை விமர்சிப்பதற்கு தகுதியோ, யோக்கியதையோ அவர்களுக்கு கிடையாது..!- அதிமுகவை சாடிய ஸ்டாலின்..!!

நான்கு நாள் பயணமாக ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு விசிட் செய்து வருகிறார். கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலதை சார்ந்த மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். சுமார் 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர்.
பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடந்து வருகிறது.புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இந்த விழாவில் கலந்துகொள்ள வருகிற வழியெல்லாம் மக்கள் சாலையின் இரு புறமும் நின்று, ஆண்கள், பெண்கள், தாய்மார்கள், வயது முதியோர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாணவியர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு இருபுறமும் இருந்து வரவேற்ற அந்தக் காட்சியை பார்த்தேன். மக்கள் கொடுத்திருக்கக்கூடிய வரவேற்பை பார்க்கிறபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு இணை எதுவும் கிடையாது என்று கூறினார்.
பேரறிஞர் அண்ணா “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார். ஆக உங்களின் சிரிப்பினில்தான் நான் இறைவனைக் காண்கிறேன், அண்ணாவை காண்கிறேன், முத்தமிழறிஞர் கலைஞரை காண்கிறேன். இந்தக் கொள்கைகளும், கோட்பாடுகளும், எண்ணங்களும், சிந்தனைகளும் நிறைவேறிவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் மட்டும்தான், திமுக அரசை விமர்சிக்கிறார்கள். என்னை விமர்சிக்கிறார்கள்.

தனிப்பட்ட ஸ்டாலினை விமர்சிப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஏனென்றால் நான் விமர்சனத்தில் வளர்ந்தவன். இன்னும் சொன்னால், விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான். எதிர்ப்பையும், அடக்குமுறைகளையும் மீறி வளர்ந்தவன்தான் நான்.யாராவது எதிர்த்தால்தான் நான் மேலும் மேலும் உற்சாகமாகச் செயல்படுவேன்.
அதே நேரத்தில், என்னை எதிர்ப்பதன் மூலமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கு, குந்தகம் விளைவிக்க நினைத்தால் அதனை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
விமர்சனங்களை விரும்புவன்தான் நான். ஆனால் விதண்டாவாதங்களை அல்ல. வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்பவன்தான் நான். ஆனால் பயனற்ற சொற்களை அல்ல. சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தங்களது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, திசை திருப்புகிற நோக்கத்தோடு திமுக அரசை இன்றைக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், திமுக அரசை விமர்சிப்பதற்கு தகுதியோ, யோக்கியதையோ, கிஞ்சிற்றும் கிடையாது என்பதை நான் அழுத்தந்திருத்தமாக தெரிவிக்க விரும்புகிறேன்.
காரணம் இந்த ஓராண்டு காலத்தில், ஓராயிரம் திட்டங்கள். ஓன்றரை வருடம் தான், இன்னும் ஒன்றரை வருடம் ஆகவில்லை, அதற்குள் இவ்வளவு திட்டங்கள். நினைத்துப் பாருங்கள், ஒரு வருடத்தில் இவ்வளவு என்றால், ஐந்தாண்டுகளில், அளப்பரிய திட்டங்களை நிறைவேற்றித், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக, உலகில் அனைத்து வளம் கொண்ட மாநிலமாக ஆக்குவதே எங்களுடைய லட்சியம்.

அதனை அறிவிக்கக்கூடிய மாநாடுதான், இந்த மாநாடு. இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது,உங்களுக்கான அரசு இது. உரிமையுடன் கோரிக்கை வையுங்கள். உண்மையுடன் நிறைவேற்றித் தருவோம். ஆகவே, இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும்’ என்று தமிழக முதலவர் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.