திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் உள்ள சுடுகாடுக்கு செல்ல பாதை அமைத்தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். திருத்தணி நகரம் மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில் 47 ஊராட்சிகளில் 90 குக்கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் மூன்று மதத்தினருக்கும் தனித்தனியே சுடுகாடு மற்றும் இடுகாடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கை மரணம், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுவது வழக்கம். தற்போது மழைக்காலம் என்பதால் அனைத்து சுடுகாட்டு பகுதிகளிலும் விஷச்செடிகளும் புதர்களும் மண்டிக்கிடக்கின்றன.
இதனால் சடலங்களை எடுத்துக்கொண்டு சுடுகாடுகளில் இறுதிச்சடங்கு செய்ய மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் இறுதிச்சடங்குகள் செய்ய மிகவும் கஷ்டப்படுகின்றனர். அந்த புதர்களில் நடந்து செல்லும்போது விஷ செடிகளால் பலர் பாதிப்படைகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியரும் ஒன்றிய நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் இணைந்து சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.