அரசு விழாக்கள் பொழுதுபோக்கு அல்ல – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் நடைபெற்ற  அரசு விழாவில்  261.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில்   135 முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும் , 183.70 கோடி ரூபாய் மதிப்பில்  1761 புதிய பணிகளுக்கான அடிக்கலும் முதலமைச்சரால் நாட்டப்பட்டது.  மேலும், 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு 167.50 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், “ஈரோடு என்பது தமிழராகிய நாம் உணர்வோடு கலந்த ஊர். பெருந்துறை அருகே திங்களுரில் தமிழ் சங்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது.சிலர் செய்யும் பணி அடக்கமாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கும். கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகள் சார்பில் எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தை அனைத்திலும் முதன்மையாக மாற்ற பணிகளை செய்துவருகிறோம். அவினாசி – அத்திக்கடவு திட்ட பணிகளை பார்வையிட்டு துரிதமாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளேன். சில மாதங்களில் பணிகள் முடிவுற்று நானே அதனை தொடங்கி வைப்பேன்.அரசு விழாக்கள் பொழுதுபோக்கிற்கிற்காக நடக்கும் விழாவோ , எங்களது புகழ் பாட  நடக்கும் விழாவோ  அல்ல. மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள்.

எனக்கு  புகழ் தேவையில்லை. இருக்கும் புகழே போதும். என் உயிர் இருக்கும்வரை மக்களுக்காக  உழைப்பேன். அனைத்து மக்களும் உயர்வு பெறும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. குறுவை சாகுபடிக்காக முன் கூட்டியே திறந்து கடைமடை பகுதி வரை நீர் செல்ல தூர் வாரப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு உயர் நீதிமன்றம் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெரியாரும், அண்ணாவும் இருந்திருந்தால் இதை பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்கள். இது நமது கொள்ககைக்கு கிடைத்த வெற்றி. திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே  வழிகாட்டியாக இருக்கிறது. இல்லம் தேடி கல்வி , பெண்களுக்கான இலவச பேருந்து  பயணம் , வீடு தேடி மருத்துவம் என தமிழக திட்டங்களை பல்வேறு மாதிலங்கள் பின்பற்றுகின்றன. தமிழகத்தில் சிசு மரணம்  குறைவு, பட்டினி சாவு இல்லை” என்றார்.

முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி , தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி , சாமிநாதன் , கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.