''இது நிஜமாவே என் மறு ஜென்மம்!'' – ராஜ்கிரண் #AppExclusive

‘‘னுஷனோட பலம், பலவீனம் ரெண்டுமே உறவுகள்தான்!’’- மலர்ந்து சிரிக்கிறார் ராஜ்கிரண். ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு நிகராக மார்க்கெட் ஆன ஹீரோ, இடையில் சந்தித்ததெல்லாம் சரமாரியான சறுக்கல்கள். இப்போது ‘தவமாய் தவமிருந்து…’ படத்தில் ஒரு ஏழைத் தகப்பனாக வாழ்ந்து காட்டியதில் தமிழ் சினிமாவை மீண்டும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

Rajkiran

 வாழ்க்கையில அடிபட்டவன், அனுபவப்பட்டவன் சொல்றேன். தன்னை உண்மையா உசுருக்குசுரா நேசிக்கிற ஒரு ஜீவன் கிடைக்காதானு தேடித் தேடியே பல பேருக்கு பாதி வாழ்க்கை போயிரும். இன்னும் சிலருக்கு ‘உன்னை நான் எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா?’னு நிரூபிக்கிறதுலயே மீதி வாழ்க்கை போயிரும். இந்த எதிர்பார்ப்பு, நிரூபிக்கறதுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் உறவு, நம்ம அப்பன்- ஆத்தாவோட அன்பு மட்டும்தான். பால், பருப்பு மாதிரி பாசத்தையும் பாக்கெட் போட்டு விக்கிற உலகத்துல ‘தவமாய் தவமிருந்து…’ மாதிரி ஒரு படம் நல்ல பாடம்யா. அதுல எனக்கும் ஒரு பங்கைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!’’ – மகிழ்ந்து நெகிழ்ந்து பேசுகிறார் ராஜ்கிரண்.

சேரன் எனக்கு இந்தப் படத்தின் கதையை சொல்றப்ப, ‘நம்ம ஹீரோவுக்கு ரெண்டு பசங்க’, ‘ஹீரோ இப்ப என்ன பண்றார்னா…’, ‘ஹீரோ அச்சாபீ ஸுக்கு சைக்கிள்ல போறார்’ங்கிற தொனியிலேயே சொன்னார். கதையைச் சொல்லி முடிச்சுட்டு, ‘அண்ணே! இதுல நான் ஹீரோ ஹீரோன்னது உங்களைத்தான்.

நீங்க நடிக்க சம்மதிச்சா, நான் இந்தப் படத்தை எடுக்கலாம்னு இருக்கேன். உங்களுக்கு சம்மதமில்லைனா, இதை அப்படியே தூக்கி தூரமா வெச்சுட்டு, வேற படம் பண்ணப் போயிருவேன். ஏன்னா, அப்பனா அந்த கேரக்டரை நீங்க பண்ணினா மட்டும்தான் சரியா வரும்னு என் மனசு சொல்லுதுண்ணே’னு தவிப்பா சொன்னார். நாலு பாட்டு, நாலு ஃபைட்டு, கொஞ்சம் தொப்புள், கொஞ்சம் ரத்தம்னு கதை பண்ற காலத்தில் சேரன் இப்படி ஒரு கதையோடு வந்ததே ஆச்சர்யம். அதுவும் ஒரு அப்பனை கதாநாயகனா யோசிச்சு, அதுக்கு என்னை மனசில் வெச்சு வார்த்திருந்தது இன்னும் சந்தோஷமான ஆச்சர்யம். உடனே சம்மதிச்சேன். அஞ்சு கிலோ உடம்பைக் குறைக் கணும்னார். நான் உடனே ஒன்பது கிலோ குறைச்சேன். ‘ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அப்பா- அம்மா’னு காரைக்குடியிலே ஷூட்டிங் ஆரம்பிச்ச நாள்லே யிருந்து முடியறவரைக்கும் பேய் பிடிக்கிறது… சாமி ஏர்றது மாதிரி அந்த ஏழைத் தகப்பன் எனக்குள்ளே ஏறிட்டான். மனசார நான் அவனா, அவன் நானாத்தான் வாழ்ந்தோம். வாழ்க்கையில அடுத்தடுத்து அவமானம், வலி, கஷ்டம்னு அனுபவிச்சிட்டே இருக்கிற ஒரு ஆத்மா. பிரிண்டிங் பிரஸ் வேலையும், பெத்த புள்ளைகளையும் தவிர எதுவும் தெரியாத ஏழை மனுஷன். உண்மையைச் சொல்லணும்னா இந்த ராஜ்கிரணுக்கும் ‘தவமாய் தவமிருந்து…’ முத்தையாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதனாலதான் அந்தப் பாத்திரத்தில் இயல்பா என்னால் வாழ முடிஞ்சுது.’’

இந்தப் படத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டீங்களா..?’’

‘‘இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு படம் நான் பண்ணலை. இனிமேலும் இப்படி ஒண்ணு கிடைக்குமானு தெரியலை. காத்திருந்து காத்திருந்து கடுமையா ஒரு தவமிருந்து பண்ணின படம்தான். ஆனா, இப்ப படம் வந்த பிறகு ஊர் உலகமே அதைக் கொண்டாடறதைப் பார்க்கும்போது பட்ட கஷ்டமெல்லாம் பறந்துடுச்சு. ‘எங்க அப்பா மாதிரியே இருந்தீங்க சார்!’னு தினம் தினம் யாராச்சும் கண் கலங்கும்போது ‘இது போதும்டா!’னு தோணுது. சேரன் எனக்குத் தம்பி. எங்களுக்குள்ளே நன்றிங்கிற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் கிடையாது. மனசிருக்கற வரைக்கும் என் உசிர் இருக்கிற வரைக்கும் மறக்க முடியாத ஒண்ணை எனக்கு சேரன் செஞ்சுட்டார். ஏன்னா, எனக்கு இந்தப் படம் நிஜமாவே மறு ஜென்மம்!’’

Rajkiran

ஆமா, அதிரடியா வளர்ந்து வந்தவர் திடீர்னு ஆளே காணாமப் போயிட்டீங்க. கடன் தொல்லைகள், பர்சனல் பிரச்னைகள்னு உங்களைப் பற்றி பல செய்திகள்… என்னாச்சு?’’

‘‘தம்பி, நான் ஒரு டிஸ்ட்ரிப்யூட்டரா என் சினிமா வாழ்க்கையை ஆரம்பிச்சவன். படப் பெட்டியைத் தூக்கிட்டு தியேட்டர் தியேட்டராப் போனவன். அப்புறம் பணப் பெட்டியையும் தூக்கினேன். நாம நம்பிக்கையில்லாம வாங்கின ஒரு படம் திடுதிப்புனு பிச்சுக்கிட்டு ஓடி, பணத்தைக் கொண்டு வந்து கொட்டும். நம்பி வாங்கின ஒரு படம் ஃப்ளாப்பாகி போட்ட காசே வராமலும் போயிடும். அப்படி சந்தோஷமும் துக்கமுமா ஸீன் மாறிட்டே இருக்கிற ஒரு தொழில், சினிமா. என்னைக் கேட்டா, வாழ்க்கையே அப்படித்தானே இருக்கு. நாளைக்கு என்ன நடக்கும்னு எவனுக்கும் தெரியாதே. ஆளை அப்படியே புரட்டிப்போட்டு அப்பாவி மாதிரி அது பாட்டுக்குப் போயிட்டிருக்கும் வாழ்க்கை.

ஒரு தயாரிப்பாளரா, நடிகனா, டைரக்டரா படிப்படியா நானேதான் என்னை வளர்த்துக்கிட்டேன். ஆனா, மனசால எந்த வசதியையும் எப்பவும் அனுபவிச்சதே இல்லை. மூணு படம் தொடர்ந்து ஹிட்டாகி… இதோ இந்த வாசலெல்லாம் கதை சொல்றவங்களும் கால்ஷீட் கேட்கறவங்களும்னு கூட்டம் முண்டியடிச்சு நின்னப்பவும் இதே ராஜ்கிரண்தான் இருந்தான். இப்பவும் அதே மனுஷன்தான் இருக்கான். வந்து குவிஞ்சப்போ கொண்டாடவும் இல்லை, இழந்து நின்னப்போ ‘அய்யோ போச்சே’னு அழுது புலம்பவும் இல்லை. ‘ஆயிரம் வாசல்கள் இதயம், அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்’னு கண்ணதாசன் எழுதினதுதானே நிஜம். மனுஷன் மனசை கொஞ்சம் ஃப்ரீயா வெளியே விட்டா, அது என்னென்னவோ பண்ணிட்டு வந்துடும். அடுக்கி வெச்ச சீட்டுக்கட்டு மாதிரி வாழ்க்கை நிமிஷத்துல பொலபொலனு சிதறிடும். எனக்கு அது நடந்துச்சு.

‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’னு இடையிலே கொஞ்ச நாள் மனம் போன போக்கில் வாழ்ந்துட்டேன். நல்லது கெட்டதுனு நின்னு நிதானிச்சுப் பார்க்க நேரமில்லாம ஓடிட்டே இருந்துட்டேன். திடீர்னு திரும்பிப் பார்த்தா நிறைய இழந்திருக்கேன். ஏன்… என்னனு விவரமா பேசறதால எந்தப் புண்ணியமுமில்லை. கஷ்ட காலத்தில் நிறைய கத்துக்கிட்டேன். நம்பிக்கையை நம்பறவன் நான். அதுதான் எப்பவும் என்னைக் காப்பாத்தியிருக்கு. கொஞ்சங்கொஞ்சமா எல்லாத்திலேருந்தும் மீண்டு வந்துட்டேன். இப்ப உங்ககிட்டே பேசறது உற்சாகமான… சந்தோஷமான பழைய ராஜ்கிரண். ‘சண்டக்கோழி’ படத்திலயும் என் கேரக்டரை நல்லா பேசறாங்க. இந்த மாதிரி நல்ல கேரக்டர்கள் வந்தா பண்ணத் தயாரா இருக்கேன்.

இன்னொரு பக்கம் நானும் ஒரு கதை ரெடி பண்ணிட்டு இருக்கேன். கணவன்- மனைவிக்கு நடுவில் நடக்கிற சந்தோஷங்களை… துக்கங்களைச் சொல்ற ஒரு கதை. அதை நானே சொந்தமா தயாரிச்சு இயக்கி நடிக்கலாம்னு இருக்கேன். ‘ராசாவின் மனசிலே’, ‘அரண்மனைக் கிளி’ மாதிரி ஒரு படம். நான் மீண்டு வந்திருக்கேன்னா அதுக்குக் காரணம் என் மனைவி ஹதீஜா நாச்சியார் பண்ணின அஞ்சு வேளை தொழுகையும் என் குருநாதர் சையத் பாபா, மகான் திப்பு சுல்தான் ஆகியோரோட ஆசியும்தான் காரணம்!’’

Rajkiran

உங்க குடும்பத்தைப் பற்றி நீங்க வெளியே பேசறதேயில்லையே…’’

‘‘இப்ப சொல்றேன் கேளுங்க… ஒரு ஆம்பளை நல்லாயிருந்தா ஆயிரம் பேரு. அவனே கெட்டுச் சீரழிஞ்சிட்டானா கிட்ட வர நாதியிருக்காது. நல்லதோ கெட்டதோ அவனை தூக்கிச் சுமக்க எப்பவும் அவன் குடும்பம் மட்டும்தான் கூடவே வரும். நான் இன்னிக்குச் சந்தோஷமா இருக்கேன்னா, அதுக்கு என் மனைவியும் குடும்பமும்தான் காரணம். என்னை நிஜமா நேசிச்சு நேர்படுத்தினது அவங்கதான்.

என் பையன் திப்பு சுல்தானுக்கு நாலு வயசாகுது. நேத்து ஏதோ ஒரு யோசனையா நடுராத்திரியில எழுந்திருச்சு தூக்கம் பிடிக்காம உட்கார்ந்திருக்கேன். இவன் சட்டுனு முழிச்சுப் பார்த்தவன், ‘வாப்பா… படுத்துக்க வாப்பா’னு என் தோளைப் பிடிக்கிறான். காரணம் இல்லாம, எனக்கு அழுகை வருது. அப்படியே அவனை அணைச்சுக்கிறேன். காலையில பாத்ரூம் போக எழுந்தால், ‘விழுந்துடாத வாப்பா’னு என் கையைப் பிடிச்சு இழுத்துட்டுப் போறான்.

அப்புறம் என் வளப்பு மகள் ஜீனத் ப்ரியாவோட அன்பு. நான் ஒரு முஸ்லிம்… ஆனா, என் டேபிளில் திருப்பதி சாமியின் படம் இருக்கே.. அவ அன்புக்காக அதை அனுமதிக்கிறேன். இதெல்லாம்தான் என்னோட சொத்து சுகம். அவங்களுக்கு அன்பான, பொறுப்பான அப்பனா வாழ்றதுதான் நிஜமான சந்தோஷம்!’’ என்கிற ராஜ்கிரண் சொல்கிறார்… ‘‘விகடன் விமர்சனத்தில் எழுதி இருந்தீங்களே, அதுதான் கரெக்ட்… வாழ்க்கைதான் வாத்தியார்!’’ சிரிக்கிறார் கண்கள் பனிக்க!

– ராஜுமுருகன்,

படம்: சு. குமரேசன்

(07.08.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து….)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.