’எங்களை தடுத்தால் போலீசையும் வெட்டுவோம்’.. கோயில் கொடை விழாவில் ரகளை செய்தவர் கைது!

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் கோவில் கொடை விழாவின் போது காவல் உதவி ஆய்வாளர் கணேசனை வெட்ட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் நான்குநேரி காவல்நிலைய எல்கைகுட்பட்ட மறுகால்குறிச்சி கிராமத்தில் கடந்த  சில தினங்களுக்கு முன்பு தோட்டத்து பேச்சியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. இந்த கோவில் கொடை விழாவின் போது இரவு இன்னிசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு நான்குநேரி காவல் உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இன்னிசை கச்சேரி நடைபெறும் மேடைக்கு அருகே சிலர் அரிவாள் மற்றும் கத்தி ஆகிய ஆயுதங்களுடன் மேடை முன்பு ஆடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  அதனை பார்த்த உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் காவலர்கள் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நவீன் மற்றும் முருகன் ஆகியோர் உதவி ஆய்வாளர் கணேசனை பார்த்து, ”எங்கள் ஊர் கொடை விழாவில் நாங்கள் இப்படி தான் ஆடுவோம்; எங்களை எந்த போலீஸ்கார்கள் கேட்டால் அவர்களை வெட்டுவோம்” என தகாத வார்த்தையில் திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அக்கம் பக்கத்தினர் தடுத்தும் கேட்காமல் நவீன் என்பவர் உதவி ஆய்வாளர் வந்த இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்துள்ளனர். மேலும் அரிவாளை எடுத்து உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற போது அதனை அப்பகுதியைச் சேர்ந்த செல்லையா அதனை கையால் தடுத்துள்ளார். அப்போது அவருக்கு வெட்டு விழுந்தது. உடனே நவீன் மற்றும் முருகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றனர். இந்நிலையில் வெட்டுபட்டு காயமடைந்த செல்லையாவை மீட்டு போலீசார் சிகிட்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி காவல் ஆய்வாளர் பொறுப்பு ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மறுகால்குறிச்சியைச் சேர்ந்த நவீன் என்பவரை பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஜூலை 29ம் தேதி நாங்குநேரி மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையானது பழிக்கு பழியாக நடைபெற்றதாக தெரிகிறது. மேலும் ஏதும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நெல்லை எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில் நான்குநேரி பகுதிகளில் கொலை மற்றும் பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்துள்ளனர். இதற்கு நாங்குநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தனிப்பிரிவு காவலர் சுந்தர் என்பவர் உடந்தையாக இருந்ததால் அவரை கொலை செய்யப் போவதாகவும் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூகவலைதளங்களில் தற்போது பரவி வருவதால் பொதுமக்கள் மற்றும் நாங்குநேரி காவலர்களுக்கு ஒருவிதமான பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இங்கு போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் கொலை மிரட்டல் விடுத்த நவீனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து  மஞ்சங்குளம் சாமிதுரை கொலைக்கு பழிக்கு பழியாக நான்குநேரி பகுதிகளில் கூலிப்படைகள் சுற்றி வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நாங்குநேரி மற்றும் வள்ளியூர் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இரவு நேர தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: `என் அம்மாவிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்’- முதியவர் கொலையில் கைதான பள்ளி மாணவர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.