என்.வி.ரமணா: மறக்க முடியாத தீர்ப்புகளும், விடைபெறும் தருணமும்!

நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக உச்ச நீதிமன்றம் திகழ்கிறது. இதன் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பது பலரது கனவாக இருக்கும். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவிற்கு பின்னர் ஏப்ரல் 24, 2021 அன்று பதவியேற்றவர் தான் என்.வி.ரமணா. இவர் இன்றைய தினம் (ஆகஸ்ட் 26, 2022) ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. காலை 10.20 மணி முதல் https://webcast.gov.in/events/MTc5Mg என்ற இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இவர் வழங்கிய குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்:

* பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள், அவர்களது கணவன்மார்கள் செய்யும் அலுவலக வேலைகளை விட குறைவானது அல்ல என்று ஜனவரி 2021ல் நடந்த வழக்கில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சூர்ய காந்த் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இல்லத்தரசிகள் அவர்கள் செய்யும் வீட்டு வேலைகளுக்கு பணம் அளிக்கப்பட வேண்டும் என்று என்.வி.ரமணா குறிப்பிட்டார்.

* மன நோயை காரணம் காட்டி விதிவிலக்கு கோருவதற்கு குற்றம்சாட்டப்பட்ட நபர், உண்மையில் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும் என்று 2020ல் நடந்த முகமது அன்வர் மற்றும் டெல்லி என்.சி.டி இடையிலான வழக்கில் நீதிபதி என்.வி.ரமணா, எஸ்.ஏ.நசீர், சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது.

* எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது நிலுவையில் உள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பட்டியலிட வேண்டும். இதுவரை பட்டியிலிடப்படாத இதேபோன்ற அனைத்து வழக்குகளையும் பட்டியிலிட வேண்டும் என்று செப்டம்பர் 2019ல் நடந்த வழக்கில் நீதிபதி என்.வி.ரமணா உத்தரவு பிறப்பித்தார்.

* டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தடை கோரும் மனுவையும், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கு எதிரான இறுதி மனுவையும் நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோஹிண்டன் ஃபாலி நரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

* காஷ்மீர் ஊரடங்கு விவகாரத்தில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், இணைய சேவையை நிறுத்த முடியாது. அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் என்.வி.ரமணா, சூர்யா காந்த், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

இன்று வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்புகள்:

* தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் முறையற்ற இலவச அறிவிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கு

* 2007 கோரக்பூர் கலவரத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு.

* ராஜஸ்தானில் சுண்ணாம்பு கல் சுரங்கத்தை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு

* கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்கங்களை மூடுவது தொடர்பான வழக்கு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.