தஞ்சை கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகளுக்கு பாதிப்பு இல்லை: நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்கம்

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்டம், கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் சுமார் 6 ஆயிரத்து 933 டன் நெல் இருப்பு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழையால் நெல் மூட்டைகள் நனைந்துவிட்டது என்று சில பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அதனைத் தொடர்ந்து நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் மண்டல மேலாளர் (தரக்கட்டுப்பாடு) கொத்தங்குடி திறந்தவெளி சேமிப்பு மையத்தை ஆக.24-ம் தேதி ஆய்வு செய்தார்.

ஏற்கெனவே அங்கு திறந்த வெளியில் இருந்த நெல் மூட்டைகள் சரியான முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதும், முதல் நாள் பெய்த மழையில் ஏதும் நனையவில்லை என்றும் தெரியவந்தது. இம்மையத்தில் ஒரு அட்டியில் உள்ள நெல் மூட்டைகள் சரிந்து விட்டதால் அதைச் சரியாக அடுக்கும்போது சிலர் அதைப் படமெடுத்து அது மழையில் நனைந்ததாகக் காட்டிவிட்டதும் தெரியவந்துள்ளது. கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள

நெல்மூட்டைகளுக்கு மழையால் எவ்வித பாதிப்பும், இழப்பும் ஏற்படவில்லை. சேமிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள 64 அட்டிகளும் (6,933 டன்) கருப்பு பாலித்தீன் கவர் கொண்டு மூடி சுற்றிலும் கயிறு கட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நெல் மூட்டைகள், அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள் தயார் நிலையில் போதிய எண்ணிக்கையில் உள்ளன. திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் ஆய்வு செய்து நெல் மூட்டைகளைப் பாதுகாக்கவும், நெல் மூட்டைகளை அரைவைக்கு துரிதமாக அனுப்பவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள், துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆட்சியர் ஆய்வு

இன்று (ஆக.25) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் , கொத்தங்குடி திறந்தவெளி சேமிப்பு மையத்தை நேரில் ஆய்வு செய்து, அங்குள்ள நெல் மூட்டைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே போன்று வருங்காலங்களில் நெல் மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்கவும், இதுபோன்று புகார் மற்றும் செய்திகள் வராமல் தடுக்கவும் மேற்கூரையிட்ட சேமிப்புக் கிடங்குகள் துறையால் கட்டப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.