திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ரயில்வே அலுவலர்கள் இன்று காலை தண்டவாளத்தை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாணியம்பாடி அருகே நியூ டவுன் ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
அப்போது சென்னையிலிருந்து கோவைக்கு சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து அந்த ரயில் வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டது. இதனை போன்றே, சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் காட்பாடியில் நிறுத்தப்பட்டது.
மேலும், லால்பாக் எக்ஸ்பிரஸ் வாலாஜாபேட்டையில் நிறுத்தப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து வந்த ரயில்வே பொறியாளர்கள் தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு, ஒரு மணி நேரம் போராடி தற்காலிகமாக கிளாம் போட்டு விரிசலை சரி செய்தனர்.
ரயில்வே பொறியாளர்கள், தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் வரை மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். மேலும், இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.