ONGC -க்கு செங்கொடிகள் துணை போகலாமா… மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்!

“ஓ.என்.ஜி.சி.யைப் பாதுகாக்கிறோம்” என்ற போர்வையில் காவிரிப்படுகையை அழிக்க ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் சி.ஐ.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் துணைப்போகலாமா ?” என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

செயராமன்

இதுபற்றி மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசியர் செயராமனிடம் பேசினோம்.
“காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலச் சட்டம்- 2020” என்பது போராடிப் பெற்ற சட்டம். அச்சட்டத்தை இல்லாமல் ஒழிக்கும் வகையில், விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ஓ.என்.ஜி.சி கிணறுகளை ஆழப்படுத்தவும், புதிய கிணறுகள் அமைக்கவும் முயற்சிக்கிறது.

ஓ.என்.ஜி.சி -யின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கங்களில் இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக, அதன் வரைமுறையற்ற செயல்பாடுகளைக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரிப்பது கண்டனத்துக்குரியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் AITUC, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான CITU ஆகிய தொழிற்சங்கங்கள் வேறு சில அமைப்புகளுடன் இணைந்து, “ஓ.என்.ஜி.சி யைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தோடு, எண்ணெய் – எரிவாயு எடுப்பு வேலைகளைத் தடையில்லாமல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பேரணியாகச் சென்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் அந்த அமைப்புகள் மனு கொடுக்கின்றன.

ஓ.என்.ஜி.சி காவிரிப்படுகையை சீரழித்திருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அனுமதியற்ற ஓ.என்.ஜி.சி கிணறுகள் காவிரிப்படுகையில் செயல்படுவதும் உண்மை. ஓ.என்.ஜி.சி.க்கு “ஷேல் மீத்தேன் திட்டம்” இருப்பதும் உண்மை. ஆனால் இத்திட்டத்திற்கு வலுவான எதிர்ப்பு காவிரிப் படுகையில் எழுந்ததால் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்கத் தடை விதித்துள்ளது. ஓ.என்.ஜி.சி பழைய கிணறுகளை மராமத்து செய்வதாகக் காட்டிக் கொண்டு, புதிய கிணறுகளை அமைக்க முற்பட்டது. இந்நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சமீபத்தில் ஐந்து இடங்களில் இத்தகைய முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியது.

ஓஎன்ஜிசி

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்திலும் கூட, பழைய கிணறு ஒன்றில் திடீரென்று மராமத்து வேலையை செய்வது போல பாவனை செய்து, புதிய கிணறு அமைக்கும் வேலைகளை ஓ.என்.ஜி.சி தொடங்கியது. இந்நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பிரச்னையை விளக்கியது. மாவட்ட நிர்வாகம் கேட்டபோது அக்கிணறை மூடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாக ஓ.என்.ஜி.சி கூறியது. ஆனால் ஆர்.டி.ஓ நேரில் வந்து பார்த்தபோது எண்ணெய் எடுப்பதற்கான அனைத்து பணிகளும் நடப்பதை கண்டு வேலையை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

காவிரி படுகையில் உள்ள அனைத்து எண்ணெய்க் கிணறுகளையும் மூடி, முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கு அனைத்து கட்சிகளும் முனைப்பு காட்ட வேண்டும். ஆனால் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான AITUC மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான CITU, இவற்றோடு வேறு சில அமைப்புகள் சேர்ந்து கொண்டு எண்ணெய்க் கிணறு வேலைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

சில ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர வேண்டும் என்பதற்காக, ஒட்டுமொத்த காவிரிப்படுகையையுமே மரணபூமியாக மாற்ற முயற்சிப்பது சரியா? இது கண்டனத்துக்குரியது. ஓராயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறோம் என்று ஒரு இலட்சம் பேரை புற்றுநோயாளியாக மாற்றக்கூடாது.

செயராமன்

போஸ்டரில் கூறியுள்ள படி 40 ஆண்டுகளாக இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாம். அப்படி என்றால் இவர்கள் வயதுதான் என்ன? இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேறு பணிப் பயன்களும் கிடையாது. இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக தொடர்வதற்காகவே ஒட்டுமொத்தப்படுகையையும் ஒழித்துத் தீர்வது என்று முடிவெடுப்பது சரியானதா?

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை வழங்கும்படி அரசிடம் கோருவதே சரியானது. அதைத்தான் தொழிற்சங்கங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால், இவர்கள் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் சொல்லிக் கொடுத்ததை அப்படியே வரி மாறாமல் ஒப்புவிக்கிறார்கள்.
தமிழக மக்கள் அனைவரும் போராடிப் பெற்ற பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை பயனற்றதாக்கும் முயற்சிகளில் தொழிற்சங்கங்கள் ஈடுபடுவதை ஏற்கவே முடியாது. இது சமூக அக்கறையற்ற செயல் ” என்று சொல்லி முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.