சண்டிகர்: அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு கூர்க்கா வீரர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையை நேபாளம் ஒத்திவைத்துள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகு 1947-ல் நேபாளம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அரசுகளுக்கு இடையே கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் அக்னிப்பாதை என்ற இந்த புதிய திட்டத்தை இணைக்க முடியாது என்ற கருத்து நிலவி வருகிறது.
இதனால், அக்னிப்பாதை திட்டத்தில் கூர்காக்களை தேர்வு செய்வதற்கான பணிகளை ஒத்திவைக்கும் முடிவை நேபாள அரசு எடுத்துள்ளது.
அக்னிப்பாதை திட்டத்தைப் பொருத்த வரையில் அதற்கு நேபாள அரசின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். இதற்கு, இந்த திட்டம் குறித்து நேபாளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அரசு கலந்துபேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். இந்த விஷயத்தில் நேபாள அரசு உறுதியாக உள்ளது.
எனவே, அக்னி பாதை திட்டத்தை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று அதற்கான முடிவுகள் தெரியும் வரை, ஆகஸ்ட் 25-ல் தொடங்க விருந்த ஆள்சேர்ப்பு பணிகளை இந்திய ராணுவம் நேபாளத்தில் நடத்தக் கூடாது என அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா ராணுவத்தில் 17.5 வயதில் இருந்து 23 வயதுக்குட்பட்ட இளைஞர் களுக்கு 4 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் மத்திய அரசு அக்னிப் பாதைதிட்டத் துக்கு ஆள் சேர்க்கும் பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.