ஆப்கானிஸ்தான்: தாலிபன் வரலாறும், ஓராண்டு ஆட்சியில் மக்களின் நிலையும் – விரிவான அலசல்!

ஆப்கனை தாலிபன்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இந்த நேரத்தில், தாலிபன்களைப் பற்றியும், அவர்கள் ஆட்சியின் கீழ் ஆப்கன் தற்போது எப்படி இருக்கிறது என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்!

யார் இந்த தாலிபன்கள்?

அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் நெடுங்காலமாக மறைமுக யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

உலக நாடுகளும் அமெரிக்கா, சோவியத் என இரு நாடுகள் பக்கமும் பிரிந்து நின்றன. இந்தியாவைப் போல அணிசேரா கொள்கையை கடைபிடித்த நாடுகளும் இருந்தன. 1978-ல் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட்) அரசாங்கத்தை அமைத்தனர். ஆனால் 1979-ல் இந்த கம்யூனிஸ்ட் அரசும் கவிழ்ந்துவிட்டது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டையே ஆக்கிரமித்தன.

அப்போது சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக யுத்தம் நடத்த அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டவர்களே முஜாஹிதீன்கள். சோவியத் ஒன்றியத்தை தாக்க அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாத கோட்பாட்டை உருவாக்கியது.

ஹிபத்துல்லா – தாலிபன் தலைவர்

அப்போதுதான் அனைவரையும் அச்சப்படுத்தும் ஜிஹாத், புனிதப் போர் என்கிற பயங்கரவாத சொற்கள் பிறப்பெடுத்தன. சோவியத் ஒன்றியத்தின் படைகளுக்கு எதிராக முஜாஹிதீன்கள் கொரில்லா தாக்குதலை நடத்தினர். இதனை அமெரிக்கா அப்போது ஊக்கப்படுத்தியது. ஆம், அமெரிக்காவுக்கு அப்போது தெரியாது இவர்கள் நமக்கு எதிராகவே திரும்புவார்கள் என்று.

இங்கிருந்து தான் தாலிபன்களின் வரலாறு தொடங்குகிறது…!

10 ஆண்டுகள் சோவியத் ஒன்றியம் விடாமல் முயற்சி செய்தது. ஆனால் இறுதியில் பல்லாயிரம் ராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் பலிகொடுத்தது. அதனால் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ஒன்றியம் 1988-ல் வெளியேற வேண்டிய சர்வதேச நெருக்கடி ஏற்பட்டது. சோவியத் ஒன்றியப் படைகள் வெளியேறிய உடனேயே அமெரிக்கா உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய போராளிகளான முஜாஹிதீன்கள் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதனால் 10,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த யுத்தங்களில் பாகிஸ்தான் ஆதரவுடன் தோன்றியவர்கள்தான் தாலிபன்கள். ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இருந்த தாலிபன்களை பாகிஸ்தான் ஆதரித்தது.

அமெரிக்கா

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் மதராஸாக்களில் படித்தவர்களும் தாலிபன்கள் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாலிபன்கள் மெல்ல மெல்ல தங்களது படையை பெருக்கிக் கொண்டு, 1998-ல் தலைநகர் காபூலை கைப்பற்றினர். அப்போது ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்தவர் புர்ஹானுதீன் ரப்பானி. இவர் அமெரிக்கா ஆதரவு அமைப்பான ஆப்கன் முஜாஹிதீன் என்கிற அமைப்பின் தலைவர். அதனால் இவர் ஆட்சியை வீழ்த்திவிட்டு அதிகாரம் தாலிபன்கள் வசமானது.

தாலிபன்களின் ஆட்சி!

தாலிபன்கள் இஸ்லாமிய ஷரியத் சட்டங்களை அமல்படுத்தினர். தொலைக்காட்சி, திரைப்படம், இசை என அனைத்துக்கும் தடை விதித்தனர். ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் கட்டாயம் முகத்தை மூட வேண்டும், குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் தண்டனை என தாலிபன்கள் ஆடிய ஆட்டம் உலகை அலரவைத்தது. 2001-ல் ஆப்கானிஸ்தான் பாமியான் பள்ளத்தாக்கில் உள்ள புத்தர் சிலைக்கு தாலிபன்கள் வெடிவைத்ததைத் தொடர்ந்து உலக நாடுகள் தாலிபன் அரசாங்கத்தை ஏற்க மறுத்தன. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் மட்டுமே அங்கீகரித்தன. பாகிஸ்தான் ஆதரவுடன் உருவான தாலிபன்கள், பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தலாகவே மாறினர்.

ஆப்கன்

தாலிபன்கள் ஆட்சிக் காலத்தில் ஒசாமா பின்லேடனின் சர்வதேச அமைப்பான அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதிக்கம் தொடங்கியது. 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம்மீது விமானங்களை மோதச் செய்து தற்கொலைப்படை தாக்குதலை அல்-கொய்தா இயக்கம் நடத்தியது. 19 தற்கொலைப்படையினர் நடத்திய இந்தத் தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்குப் பின்னர்தான் உலகம் பயங்கரவாதம் பற்றி அதிகம் பேசத் தொடங்கியது. அப்போது தனிநாடு, சுதந்திரம், விடுதலை யுத்தம் எனப் போராடிய பல தேசிய இனங்களும் பயங்கரவாத பட்டியலில் சிக்கின.

தலையெடுத்த தாலிபன்கள்!

இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து ஈராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இறங்கின. தாலிபன்கள் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டு ஜனநாயக முறையிலான அரசு ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டது. கடந்த 19 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசுதான் ஆட்சி செய்தது. நேட்டோ படையும் அங்கே இருந்தது. ஆனால் ஓராண்டுக்கு முன்னர் நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில், தற்போது தாலிபன்கள் மீண்டும் தலையெடுத்து தலைநகர் காபூலை 2021-ம் ஆண்டு, ஆகஸ்ட்15-ம் தேதி கைப்பற்றினர். இதனால் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி மீண்டும் உருவாகியது.

தாலிபன்

தாலிபன்கள் தலைவர்கள் யார்?

தா‍லிபன்கள் இயக்கத்தை உருவாக்கியது ஒற்றைக் கண் முல்லா ஒமர். இவர் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் 2016-ல் கொல்லப்பட்டார். தற்போது தாலிபன்கள் இயக்கத்தின் தலைவராக இருப்பது ஹைபத்துல்லாஹகுன்ஜடா (Haibatullah Akhundzada). அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் Ayman al-Zawahiri-ன் தீவிர விஸ்வாசி. முல்லா ஒமரின் மரணத்துக்குப் பின்னர் தாலிபன்கள் இயக்கம் சிதறிப் போகாமல் இருக்கச் செய்தவர் Akhundzada.

தாலிபன்கள் தலைவர்களில் முக்கியமானவர் முல்லா பார்தார்(Mullah Baradar). முல்லா ஒமரின் நெருங்கிய சகாவான பார்தார், 2010-ல் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டார். தாலிபன்களின் அரசியல் பிரிவு தலைவர்தான் இந்த பார்தார். சோவியத்துக்கு எதிராக அமெரிக்கா ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த ரப்பானியின் மகன் சிராஜூதீன் ஹக்கானி, தாலிபன்கள் இயக்கத்தின் துணைத் தலைவர். அத்துடன் ஹக்கானி நெட்வொர்க் என்கிற பயங்கரவாத இயக்கத்தின் தலைவர். இந்த அமைப்பு அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகும். முல்லா ஒமரின் மகன் முல்லா யாகூப், தாலிபன்களின் ராணுவ பிரிவு தளபதி. இவர்களின் கட்டுப்பாட்டில்தான் தாலிபன் இயக்கம் இருக்கிறது. இப்போது அமைதி வழியில் ஆட்சி நடத்த முயன்று கொண்டிருக்கின்றனர் தாலிபன்கள். உலக நாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானின் நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், தாலிபன்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் இருண்ட காலத்தை நோக்கி தள்ளப்பட்டுவிட்டது என்பதே அனைவரின் கூற்றாக இருக்கிறது!

ஆப்கானிஸ்தான்

தாலிபன்களின் ஒரு வருட ஆட்சி… தவிக்கும் ஆப்கன் மக்கள்!

காபூலை தாலிபன்கள் கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி அமைந்து ஓராண்டாகிவிட்ட நிலையில், அந்த நாட்டில் நோயும், பசியும், துயரமும் மட்டுமே நிறைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் படிதான் ஆட்சி செய்யப்படும் என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. குறிப்பாக பெண் கல்வி, பெண் சுதந்திரம் போன்ற உரிமைகள் வழங்கப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், தாலிபன்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை. அங்கு தற்போது வறுமையும், பசியும், நோயும் மட்டுமே இருக்கிறது.

ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் திடீரென வாந்தி பேதியுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளை நாடினர். மக்களுக்கு ஏற்பட்டிருந்த தொற்று காலராவை ஒத்திருந்தாலும் அதை உறுதிசெய்ய எவ்வித மருத்துவ வசதியும் போதிய அளவில் இல்லை. பொது மருத்துவமனை தலைவர் மருத்துவர் இஷானுல்லா ரோடி கூறுகையில், “நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. நான் ஒருநாளைக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்கினேன். நோயாளிகள் அதிகம், மருத்துவர்கள் குறைவு, மருந்துகளும் குறைவு” என்றார்.

ஆப்கானிஸ்தான்

பட்டினியில் வாடும் குழந்தைகள்!

அடிப்படை மருத்துவ வசதி இல்லாதது ஒருபுறம் இருக்க, ஆப்கன் குழந்தைகள் பட்டினியில் வாடுகின்றனர். குறிப்பாக ஆப்கன் நாட்டின் தென் பகுதியில் பசியும் பட்டினியும் மிகுந்துள்ளது. இது குறித்து ஆப்கனின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள பெண்கள் கூறுகையில், “தாலிபன் ஆட்சிக்குப் பின்னர் எங்களால் சமையல் எண்ணெய்கூட வாங்க முடியவில்லை. மருத்துவமனையில் எங்கள் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் சேர்க்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ரொட்டி வாங்குவதுகூட கடினமாகிவிட்டது” என்கிறார்கள்.

மருத்துவமனையில் செவிலியர்களும் மருத்துவர்களும், “இங்கே அன்றாடம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் வருகின்றனர். பட்டினியால் இன்னும் நிறைய குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இன்னும் பலரால் இங்கு வரமுடியாத நிலைகூட இருக்கலாம். எத்தனை குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர் என்ற புள்ளிவிவரம்கூட இல்லை” என்கிறார்கள்.

தாலிபன் | Taliban fighters patrol in Kabul, Afghanistan

ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அப்போது சர்வதேச அமைப்புகள் உதவிகளைச் செய்தன. அது ஒரு பேரிடர் நிகழ்வு, அதுவும் குறிப்பிட்ட இடத்தில் நிகழ்ந்தது என்பதால் எளிதில் காப்பாற்ற முடிந்தது. ஆனால், அங்குள்ள 3.8 கோடி மக்களுக்கும் உதவிகள் சென்றடைய வேண்டுமானால் முறையான அரசு செயல்பட வேண்டும்.

தாலிபன்கள் இஸ்லாமிய அரசாங்கத்தை செயல்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், வேறு எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் நாடு மீண்டும் பயங்கரவாதத்திற்கான பயிற்சி மைதானமாக மாற தொடங்கியுள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் ஆப்கனில் ஆட்சியைப் பிடித்த தலிபன்கள், இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். இந்நிலையில், தங்களது ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், துப்பாக்கி ஏந்திய தலிபன்கள் தலைநகர் காபூல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர். அப்போது, ‘இஸ்லாம் வாழ்க; அமெரிக்காவுக்கு மரணம்’ போன்ற கோஷங்களை அவர்கள் முழங்கியதாகக் கூறப்படுகிறது.

தாலிபன் – ஆப்கானிஸ்தான்

ஒருபுறம் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆப்கனிலிருந்து வெளியேற முனைப்பு காட்ட, மறுபுறம் ஆப்கன் மக்களும் அங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என காபூல் விமான நிலையத்தில் காத்துக்கிடந்ததை நாம் அனைவரும் அறிவோம். தாலிபன்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றனர். அதேபோல தாலிபன்களிடமிருந்து குழந்தைகளாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக பலர் தங்கள் குழந்தைகளை மட்டுமே பிற நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தாலிபன்கள் வருகையே அச்சத்தை கொடுத்த நிலையில், அவர்கள் ஆட்சி செய்த இந்த ஓராண்டில் மக்கள் உணவுக்காக தங்கள் உடல் உறுப்புகளையும், பெற்ற குழந்தைகளையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் தாலிபன்களை உலக நாடுகள் புறக்கணித்ததால் ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்துவந்த பொருளாதார உதவிகள் தடைப்பட்டன. இதனால், அடிப்படை வசதிகளின்றி அந்நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மிக மோசமான மனித உரிமை மீறல் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மக்கள் சுதந்திரம் பற்றி பேசுகையில் அங்குள்ள பெண்களின் வேலை செய்யும் சுதந்திரம், அவர்கள் விரும்பியபடி ஆடை அணிவது அல்லது தாலிபன் ஆட்சியில் வீட்டை விட்டு தனியாகச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுமோ போன்ற அச்சங்கள் இருந்த நிலையில், அவை அனைத்தையும் கட்டுப்பாடுகளாக விதித்தனர் தாலிபன்கள்.

தாலிபன் தலைவர்கள்

மேலும், பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைக்கு செல்வதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால், ஒரு வருடத்திற்குப் பிறகும், சிறுமிகள், இளம்பெண்கள் இன்னும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. பெண்கள் பொது இடங்களில் தலை முதல் கால் வரை மூடி, தங்கள் கண்களை மட்டுமே காட்ட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளால் பெண்கள் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர். அதேபோல ஆண்கள் கட்டாயம் நீளமான தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் கல்வி நிறுவனங்களில் ஆண்களுக்கு பாடம் நடத்த தடை, பெண்கள் அரசு துறைகளில் பணிபுரிய தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபன்கள் விதித்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.