கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம். இச்சண்டையில் சில நேரங்களில் கணவன் அல்லது மனைவி பிரிந்து செல்வதுண்டு. உத்தரப் பிரதேசத்தில் மனைவி தொடர்ந்து சண்டை போடுவதாகக் கூறி ஒருவர் மரத்தில் ஏறி வாழ்க்கை நடத்தி வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தின் கோபகஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராம் பிரவேஷ். 42 வயதாகும் ராம், தன் மனைவி தொடர்ச்சியாகச் சண்டை போட்டுக்கொண்டே இருப்பதாகவும், எப்போது பார்த்தாலும் வாய்த் தகராறு இருந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவிக்கிறார். சில நேரங்களின் அவர் தன்னை அடிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
இதனால் வாழ்க்கை வெறுத்துப்போன ராம் தனது மனைவியால் வரமுடியாத இடத்திற்குச் செல்ல முடிவு செய்து, அதே கிராமத்தில் உள்ள பனை மரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக, ராம் பிரவேஷ் பனை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்ந்து வருகிறார் என்கிறார்கள்.
கிராமத்திலுள்ள அனைவரும் கேட்டுக்கொண்டும் அவர் கீழே இறங்கவே இல்லை. இதனால் ராமிற்குத் தேவையான உணவை அவரது உறவினர்கள் கயிற்றில் கட்டி மேலே அனுப்பி வைக்கின்றனர். அதனை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே வாழ்கிறார் ராம் பிரவேஷ்.
पत्नी का ऐसा डर कि एक महीने से 100 फीट ऊंचे ताड़ के पेड़ पर रह रहा पति, खाना-पीना-सोना सब वहीं#मऊ #pappu #GhulamNabiAzad pic.twitter.com/ZAJwpOn5hb
— ankit kumar singh (@ankitku02393426) August 26, 2022
யாரும் பார்க்காத நேரத்தில் இரவில் மட்டும் அவர் எப்போதாவது இறங்கி கீழே வருவதுண்டு. வந்துவிட்டு இயற்கை உபாதையைக் கழித்தல் போன்ற வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மரத்தில் ஏறிக்கொள்கிறார். இது குறித்து கிராம மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து பார்த்துவிட்டு அவர்களும் ராமைக் கீழே இறங்கச் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் அவர் இறங்க மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பச் சென்றுவிட்டனர்.
கிராமத் தலைவர் தீபக் குமார் இது குறித்துக் கூறுகையில், “பனை மரத்திற்கு அருகில் ஏராளமான வீடுகள் இருக்கின்றன. ராம் மரத்திற்கு மேல் இருந்து கொண்டு கீழே இருக்கும் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கிறார் என்று கிராம பெண்கள் புகார் செய்துள்ளனர். இதையடுத்து இது குறித்து போலீஸில் புகார் செய்தோம். ஆனால் போலீஸார் வந்து பார்த்து, வீடியோ எடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர்” என்று குறைபட்டுக் கொண்டார்.
ராம் பிரவேஷ் மரத்தில் வாழ்வதைப் பார்க்கத் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.