ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் வீடு உள்பட பல்வேறு வசதிகள்! நீதிபதிகள் விதிகளில் திருத்தம்…

டெல்லி: ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் வீடு உள்பட பல்வேறு வசதிகள் கிடைக்கும் வகையில் உச்சநீதிமன்ற  நீதிபதிகள் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த திருத்தத்தின்படி வசதிகளை அனுபவிக்கப்போகும் முதல் ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.ரமணா ஆவார்.

ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வாழ்நாள் வரை பல்வேறு சலுகைகளை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் விதிகளில் திருத்தம் செய்து மத்தியஅரசு அ றிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற  தலைமை நீதிபதி, இனிமேல்  வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவச வீடு,  வாகன ஓட்டுனர் மற்றும் செயலக உதவியாளர் அரசு செலவில் வைத்துக்கொள்ளலாம். இதுமட்டுமின்றி  ஓய்வுக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக் காவலரைத் தவிர வீட்டில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதிகளும் கிடைக்கும். விதிகளில் திருத்தப்பட்ட விவரம் அரசு கெஜட்டிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை மற்றும் நீதித்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது,

  • ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிக்கு அவர் ஓய்வு பெற்ற நாளில் இருந்து அடுத்த 5ஆண்டுகளுக்கு 24மணிநேரமும் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அவருடனும், அவரின் வீட்டுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். 
  • ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிக்கு டெல்லியில் டைப்-8 ரக வீடு ஓய்வு பெற்ற நாளில் இருந்து 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 
  • உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு 24 மணிநேரமும் தனிப்பட்ட பாதுகாவலர்களும், வீட்டுக்கும் அவருக்கும் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 
  • இது தவிர உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிக்கு வாழ்நாள் வரை கார் ஓட்டுநர், வீட்டு வேலையாள், மற்றும் தனிஉதவியாளர் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. (முன்பு இந்தசலுகை தலைமை நீதிபதிக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.)
  • விமானநிலையங்களில் லாஞ்ச் வசதி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகளுக்கும் மட்டுமின்றி, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கும் பொருந்தும்.
  • மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த லாஞ்ச் வசதி பொருந்தும்.
  • ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிக்கு வீட்டுக்கு இலவசமாக தொலைப்பேசி வசதியும், தொலைப்பேசி கட்டணம், செல்போன், பிராண்ட்பேண்ட் , டேட்டா கார்டு ஆகியவை மாதத்துக்கு ரூ.4200க்கு மிகாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். 
  • வீட்டு வேலையாள், ஓட்டுநர், மற்றும் தனிப்பட்ட உதவியாளர், தொலைப்பேசிக் கட்டணம் ஆகியவற்றுக்கான செலவுகள் உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதி மன்ற செலவில் சேர்க்கப்படும்.
  • இப்போது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, நீதிபதிகளுக்கு மாதாந்திர பணப்பலன்களாக பாதுகாவலர், வீட்டு உதவியாளர், ஓட்டுநர் ஆகியவற்றுக்கு பணம் வழங்கப்படுகிறது. அது நிறுத்தப்படும்.
  • அதற்கு பதிலாக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி  ரூ.70ஆயிரம் வரை இந்த பணிகளுக்காக வேலையாட்களை நியமிக்கலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரூ.39ஆயிரத்துக்குள் ஆட்களை நியமிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.