கோலிவுட் ஸ்பைடர்: இந்தியன் 2-வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் | தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா?

* சசிகுமார் சென்னை வீட்டை காலி செய்துவிட்டு மதுரை வீட்டுக்குப் போய்விட்டார். சென்னைக்கு ஷுட்டிங் மற்றும் பட வேலையாக வந்தால் ஹோட்டலில்தான் தங்குகிறார். கொரோனாவின் போது வீட்டிலிருந்தவருக்கு இப்போது வீட்டை விட்டு தனியாகத் தங்குவது பிடிக்கவில்லையாம். இதனால் அவரிடம் கதை சொல்கிறவர்கள் இப்பொழுதெல்லாம் மதுரைக்குத்தான் போகிறார்கள். அங்கே வீட்டிலிருந்து கொண்டு தனது இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளையும் பார்க்கிறார். இடையில் பொழுதுபோக்காக அவர் பார்ப்பது விவசாய வேலைதான். எல்லா ஞாயிறுகளிலும் வயலில் இறங்கிவிடுகிறார் சசிகுமார்.

‘கோப்ரா’ பட விழா

* ‘கோப்ரா’ பிரமோஷனுக்காக வெளியில் வந்திருக்கிறார் விக்ரம். இப்போதைக்கு அவருக்குக் கண்டிப்பாக மூன்று மாத கால ஓய்வு தேவை என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கை, பா.இரஞ்சித்திடம் சொல்லித் தள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார். எனவே இரஞ்சித், அந்த ஸ்கிரிப்டை இன்னும் செழிப்பாக்கப் போகிறார். இன்னொரு தகவல், விக்ரமிடம் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் சொல்லிவிட்டதால் வீட்டிற்குள்ளே சுற்றி வந்து நடைப்பயிற்சி செய்கிறார். உணவுப் பழக்கத்திலும் பல மாறுதல்கள் அவரிடம் வந்துவிட்டன. டயட்டிலும் மெனக்கெடுகிறார். அசைவ உணவுகளை அதிகமாக சூப் வடிவத்தில் மட்டுமே இப்போது எடுத்துக் கொள்கிறார்.

* யாத்ராவின் ஸ்கூல் பங்ஷனுக்கு தனுஷ் – ஐஸ்வர்யா சேர்ந்து போனதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு பேரும் ராசியாகி விட்டார்கள் என்ற செய்தி இணையதளம் முழுக்கப் பரவியது. சரி, அந்த விஷயம் நடந்தால் நல்லதுதானே என்ற சந்தோஷத்துடன் விசாரிப்புகளைத் தொடங்கினோம். ‘அப்படி ஒரு இணைப்புக்குச் சாத்தியமே இல்லையாம்’ என்ற செய்திதான் இறுதியாகக் கிடைத்தது. யாத்ராவாக விரும்பி கேட்டுக் கொண்டதால்தான் இது நிகழ்ந்ததாம். பள்ளியில் ஒட்டுமொத்த குடும்பமும் வருவார்கள். ஆனால் அப்பா, அம்மாவோடு ரஜினி தாத்தாவும், பாட்டியும் வந்தால் பள்ளியின் விழா வேறு வடிவத்திற்குப் போய்விடும், வீட்டிலிருந்தே வாழ்த்துங்கள் என்று பேரன் சொல்லிவிட்ட காரணத்தால் ரஜினி மற்றும் லதா வரவில்லையாம். மேலும் ம(ன)ண முறிவுக்குப் பிறகு ரஜினி – தனுஷ் சந்திப்பு தவிர்க்கப்பட்டால் நல்லது என்றுதான் பேசி முடிவெடுத்தார்களாம். ஆக, பள்ளிக்கூட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இனி தனுஷ் – ஐஸ்வர்யா ஒன்றாக ஆஜர் ஆவார்கள் எனச் சொல்லப்படுகிறது.

பள்ளி விழாவில் தனுஷ் – ஐஸ்வர்யா

* அமெரிக்கச் சிகிச்சைக்குப் பிறகு டி.ராஜேந்தர் பூரண நலத்துடன் இருக்கிறார். வீட்டிலும் ஓய்வெடுத்து வருகிறார். அவரிடம் இனிமேல் கடுமையான உடற்பயிற்சி செய்யக்கூடாது என டாக்டர்கள் சொல்லி விட்டனர். இதனால் அவரது வீட்டில் இருக்கும் ஜிம் பக்கமே அவர் தலை காட்டுவதில்லை. இதற்கிடையே தீவிரமாக சிம்புவிற்குப் பெண் பார்க்கிற முயற்சியில் இருக்கிறார்கள். மயிலாடுதுறை சார்ந்து பெண் தேடுகிறார்கள். இப்போதைக்கு டி.ஆர் பெண் பார்க்கச் செல்வதில்லை. அவரின் மனைவி உஷாதான் பெண் பார்க்கிறார். மாதத்திற்கு இருமுறையாவது ஊரில் பெண் பார்க்கும் படலம் தொடர்கிறது. கூடவே இலக்கியாவும் சென்று அண்ணனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடுகிறார் எனவும் தகவல். போகிற போக்கையும், வேகத்தையும் பார்த்தால் அடுத்த வருடம் நிச்சயம் சிம்புவுக்குக் கல்யாணம் என்பதுதான் உண்மை.

இந்தியன் 2

* ‘இந்தியன் 2’க்கான ஸ்கிரிப்ட் பணிகள் எல்லாம் ஏற்கெனவே முடிந்துவிட்டன. விவேக், நெடுமுடி வேணு என சில நடிகர்களின் மறைவினால் மட்டும் சில மாறுதல்கள் தற்போது செய்யப்பட்டு இருக்கின்றன. முன்பே பெரும்பாலான ஷூட்டிங்கும் முடிந்து விட்டது என்கிறார்கள். படத்தின் முந்தைய கேமராமேன் ரத்னவேலு வேறு கமிட்மென்ட்டில் மாட்டிக்கொண்டதால் இப்போது புதிதாக ரவிவர்மன் ஒளிப்பதிவாளருக்கான பணியை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அவர் ஏற்கெனவே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமலுடன் பணிபுரிந்து இருப்பதால் அவர்களுக்குள் நல்லுறவு எப்போதும் இருக்கும். ‘தசாவதாரம்’ படமும் அவர் வேலை பார்த்ததுதான். ‘பொன்னியின் செல்வன்’ இவ்வளவு சீக்கிரம் முடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் ரவிவர்மன்தான். அதை முடித்துவிட்டு இந்திக்குப் போகவிருந்த ரவியைக் கமல்தான் வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார் என்கிறார்கள். ஆக இன்னும் நான்கு மாதத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்வோம் என்ற விதத்தில் இப்போது ‘இந்தியன் 2’ தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.