தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரக தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு

சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் தலைவராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் நிர்வாகிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த அமைப்புக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது இதன் செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் மணி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் மணி வெற்றி பெற்றார்.

தற்போது 5 ஆண்டு பதவிக் காலம் முடியும் நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனத் தேர்தல் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் அவகாசம் சமீபத்தில் முடிவடைந்தது. தலைவர் பதவிக்குபள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.

இதையடுத்து, தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ்,போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாரணர் இயக்குநரக மாநில முதன்மை ஆணையராக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமாரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாடநூல் கழக செயலாளர் ச.கண்ணப்பன் உட்பட 12 பேர் துணைத் தலைவர்களாகவும் தேர்வாகியுள்ளனர். அவர்களில் 6 பேர்பெண்கள். இதற்கு முன்பு நெடுஞ்செழியன்,க.அன்பழகன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் சாரணர் இயக்குநரக தலைவர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.