பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டையில் காவல் துறை சார்பில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியும் வருகின்றனர். இதன், ஒரு பகுதியாக ஆர்.கே.பேட்டை காவல் துறை சார்பில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இதில், தனியார் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, திருத்தணி உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ் தொடங்கி வைத்தார். காவல் ஆய்வாளர் ராஜ் முன்னிலையில் விளக்கணாம்பூடி புதூர் சந்திப்பு சாலையிலிருந்து பஜார் பிரதான சாலை வழியாக பள்ளிப்பட்டு, திருத்தணி சாலைகளில் மாணவர்கள் பேரணியாக சென்றனர். இதில், கைகளில் போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில் உதவி காவல் ஆய்வாளர் விஷ்ணு, தனியார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜெ.டி.தினகரன், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.