கோவையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: போக்குவரத்து பாதிப்பு

கோவையில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்கள், மேம்பாலங்களின் கீழ் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ய தொடங்கியது. விடிய, விடிய பெய்த மழை நேற்று காலை ஓய்ந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு கன மழை மீண்டும் கொட்டித்தீர்த்தது. இதனால், அவிநாசி சாலை அண்ணா மேம்பாலம், வடகோவை மேம்பாலம், லங்கா கார்னர் பாலம், கிகானிக் பாலம் உள்ளிட்ட பாலங்களின் கீழ் பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது.

இதனால் அவ்வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, சத்தி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளின் சாலையோர தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

பொன்னையராஜபுரம் உள்ளிட்ட சில தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சுங்கம் அருகேயுள்ள கல்லறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையோரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் திருச்சி சாலை சங்கனூர் கால்வாய், லங்கா கார்னர் பாலம், அண்ணா மேம்பாலம் கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆய்வு செய்து தேங்கிய மழைநீரை அகற்றும் பணியை தீவிரப்படுத்தினர். ராட்சத மோட்டார்கள் வைத்து மேம்பாலங்களின் கீழ் தேங்கிய தண்ணீர் உறிஞ்சப்பட்டு, வடிகால்கள் வழியாக குளத்துக்குள் விடப்பட்டது.

தற்காலிக தரைப்பாலம் சேதம்

நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிங்காநல்லூர் – வெள்ளலூர் வழித்தடத்தில் உள்ள தற்காலிக தரைப்பாலம் 3-வது முறையாக நேற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகன ஓட்டுநர்கள் மாற்றுப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். அடித்து செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலத்தை சீரமைப்பது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

மழையளவு (மில்லி மீட்டரில்)

கோவையில் நேற்று காலை நிலவரப்படி அன்னூரில் 14.20, மேட்டுப்பாளையத்தில் 33, சின்கோனாவில் 50, சின்னக்கல்லாறில் 55, வால்பாறை பி.ஏ.பியில் 73, வால்பாறை தாலுகாவில் 69, சோலையாறில் 53, ஆழியாறில் 3, சூலூரில் 13, பொள்ளாச்சியில் 11, கோவை தெற்கில் 42, விமான நிலையத்தில் 21.80, வேளாண் பல்கலைக் கழகத்தில் 59, பெரியநாயக்கன்பாளையத்தில் 3.40 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.