தேசிய விளையாட்டு தினம்: தியான்சந்த் பிறந்த நாள் ஆகஸ்ட்:29 1905| Dinamalar

இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இளைஞர் ஒருவர் ஹாக்கிப் போட்டியை பார்க்கப்போனார். போட்டியில் ஆங்கிலேயர்கள் ஆதரித்த அணிக்கு எதிர் அணியை அவர் உற்சாகபடுத்த… ஆங்கிலேய அதிகாரி கடுப்பாகி விட்டார். நீ வேண்டுமானால் விளையாடு பார்க்கலாம்… என்று நக்கலாக சொல்ல அந்த போட்டியில் களம் இறங்கி அவர் அடித்த கோல்கள் நான்கு.

மிகப் பிரகாசமான மின்விளக்குகள் இல்லாத காலத்தில், நிலவொளியில் பயிற்சி செய்யும் பழக்கம் சந்துக்கு உண்டு. இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோத முதல் முறையாக தேர்வானது. அதில் இவரும் இடம் பெற்றார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி அசத்தியது. அந்தப் போட்டித் தொடரில் மொத்தம் 192 கோல்களை இந்திய அணி அடித்தது. அந்த கோல்களில் நூறு கோல்கள் சந்த் அடித்தது என்பது சிறப்பம்சம். ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற எல்லா போட்டியிலும் (பதினெட்டு) இந்தியா வென்றிருந்தது. டான் பிராட்மன் இவரின் ஆட்டத்தை பார்த்துவிட்டு நாங்கள் ரன் அடிப்பது போல இவர் கோல் அடிக்கிறார் என்று வியந்திருக்கிறார்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள சென்ற பொழுது வழியனுப்ப வெறும் மூன்று நபர்கள்தான் வந்திருந்தார்கள். ஆனால், பதக்கத்துடன் திரும்பிய பொழுது பம்பாய் நகரே ரசிகர்களால் நிரம்பி இருந்தது.

இங்கிலாந்து அணி தான் அதற்கு முந்தைய ஒலிம்பிக்கில் சாம்பியன். இந்திய அணி இங்கிலாந்தில் போய் கலந்து கொண்ட பதினொரு போட்டியிலும் வென்று விடவே ஒலிம்பிக் போட்டிக்கு இங்கிலாந்து அணிக்கு பதிலாக இந்தியா போனது.

இறுதிப்போட்டிக்கு முந்தைய எல்லா போட்டிகளிலும் வென்றிருந்த இந்திய அணி மொத்தம் 26 கோல்கள் அடித்தது. அதில் பதினோரு கோல்கள் நம் நாயகன் அடித்தது. இறுதிப்போட்டி ஹாலந்து நாட்டின் தலைநகரில் ஹாலந்து அணிக்கு எதிராக நடந்தது. சொந்த ஊர் உற்சாகத்தோடு ஆடிய அந்த அணியை மூன்றுக்கு பூஜ்யம் என்று இந்தியா வென்று முதல் தங்கத்தை பெற்றது. அதில், தியான் சந்த் அடித்தது இரண்டு கோல்கள்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள சென்ற பொழுது வழியனுப்ப வெறும் மூன்று நபர்கள்தான் வந்திருந்தார்கள். ஆனால், பதக்கத்துடன் திரும்பிய பொழுது பம்பாய் நகரே ரசிகர்களால் நிரம்பி இருந்தது.

அடுத்த ஒலிம்பிக்கிலும் கலக்கி எடுத்தது இந்திய அணி. இறுதிப்போட்டியில் அமெரிக்காவை அலற விட்டார்கள். இருபத்தி நான்கு கோல்கள் அடித்தது இந்திய அணி. அமெரிக்க அணியோ ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தது. இதில் சந்த் எட்டு கோல்களும், அவர் தம்பி பத்து கோல்களும் அடித்திருந்தார்கள்.

இங்கிலாந்து அரசி ஒரு முறை இவரிடம் தன் குடையை கொடுத்து விளையாடச் சொல்ல, அதிலும் கோல் அடித்திருக்கிறார் தியான்சந்த்! பெர்லின் ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்த பொழுது முப்பத்தி ஒரு வயது அவருக்கு. தோல்வி என்பது என்னவென்றே தெரியாத இந்திய அணி பயிற்சி போட்டிகளில் தோற்றிருந்தது.

முறையான சீருடைகள், காலணிகள் என எதுவும் இல்லாமலும், ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து வந்து இறங்கிய களைப்பு தீருவதற்குள் ஜெர்மனியுடனான பயிற்சி போட்டியில் கலந்து கொண்டது இந்திய அணி. இதில் 4/1 என்று நம் அணி தோற்றது. இருந்த போதிலும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சிறப்பக விளையாடி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

தியான் சந்த் ரயில்வே தண்டவாளங்களில் பந்தை இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்துக்கொண்டே சென்று பயிற்சி செய்வார் என்று சொல்வர்

பெர்லின் நகரில் இறுதிப்போட்டி… ஹிட்லர் தனது நாட்டு அணியின் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வத்துடன் அமர்ந்து இருந்தார். ஏற்கனவே இந்தியாவை தோற்கடித்த கம்பீரத்தோடு இருந்தது ஜெர்மனி அணி. இந்திய அணியினர் காங்கிரஸ் கொடியை வணங்கிவிட்டு களம் புகுந்தார்கள். முதல் பாதியில் இந்திய அணி ஒரே ஒரு கோல் தான் அடித்தது.

தியான் சந்த் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி எறிந்தார். வெறும் கால்களோடு ஆட்டக்களத்தில் புகுந்தார். பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்க, தியான் சந்தின் கால்களும், கைகளும், குறிப்பாக ஹாக்கி மட்டையும் மாயஜாலம் செய்யத் துவங்கியது… மூன்று கோல்களை அவர் அடிக்க இந்தியா மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கத்தை வென்றது. தியான் சந்த் ரயில்வே தண்டவாளங்களில் பந்தை இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்துக்கொண்டே சென்று பயிற்சி செய்வார் என்று சொல்வார்கள்.

உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பரவச் செய்த இவரை வறுமை வாட்டியது. வேட்டையாடுவதிலும், மீன் பிடிப்பதிலும் தன் நேரத்தைக் கழித்தார். கடைசி காலத்தில், அங்கீகாரம் கிடைக்காமல் ஒரு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் கல்லீரல் புற்றுநோயால் இறந்து போனார்..!

நெடுங்காலம் கழித்து அவரது மகன் ஆக்லாந்து நகருக்குப் சென்ற பொழுதுதான் தியான் சந்தின் அருமை புரிந்தது. அவரது ஹாக்கி மட்டையின் மாயாஜாலத்தால் பார்வையாளர்களை பிரமிக்க வைத்த அவரைப்பற்றிய பல குறிப்புகள் அங்கே காணப்பட்டது.

வியன்னாவில், நான்கு கைகள் – ஒவ்வொன்றும் ஹாக்கி ஸ்டிக்கைப் பிடித்திருக்குமாறு அவரது சிலை சிரிக்கிறது. அது தியான் சந்த் எனும் சகாப்தம்..!

இவரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஐதான் இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.