வங்கதேசத்துக்கு நதிநீர், வெள்ள விவரம் கூடுதலாக வழங்கல் – இருதரப்பு அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் இந்தியா தகவல்

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து வங்கதேசத்தில் பாயும் நதிகளின் நீர், மழைக் காலங்களில் பாய்ந்தோடும் வெள்ளம் ஆகியவை தொடர்பான விவரங்கள் கூடுதலாக அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-வங்கதேச நதிகள் ஆணையத்தின் 38-வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். வங்கதேச பிரதிநிதிகள் குழுவுக்கு அந்நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர் ஜாஹீத் ஃபரூக் தலைமை வகித்தார். வங்கதேச நீர் வளங்கள் துறை துணை அமைச்சர் இனாமுல் ஹோக் ஷமீமும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்ளுதல், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் சம்பந்தமான தகவல்களை பரிமாறிக் கொள்வது, நீர் மாசு பிரச்சினையை எதிர்கொள்வது போன்ற பரஸ்பர விருப்பம் உள்ள ஏராளமான இருதரப்பு விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தின்போது குஷியாரா நதியின் இடைக்கால நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்தன. கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா – வங்கதேசம் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஃபெனி ஆற்றிலிருந்து தண்ணீரை பயன்படுத்துவதற்கான வடிவமைப்பு மற்றும் இருப்பிடம் இறுதி செய்யப்பட்டதை இருதரப்பு குழுக்களும் வரவேற்றன.

இதைத் தொடர்ந்து கங்கை, பிரம்மபுத்திரா, பராக் உள்ளிட்ட நதிகளில் திறந்து விடப்படும் வெள்ளம் தொடர்பான மிகத் துல்லியமான கூடுதல் தகவல்களை வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் வங்கதேசம் கேட்டுக் கொண்டது.

ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர், மழைக்காலங்களில் பாய்ந்தோடும் வெள்ளம் தொடர்பான கூடுதல் விவரங்கள், தகவல்கள் வங்கதேச அரசுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு வருவதாக அப்போது இந்தியக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரையிலான மழை கணிப்பு, நதிகளில் பாய்ந்தோடும் வெள்ளம் தொடர்பான தகவல்கள் வங்கதேசத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தியக் குழு தெரிவித்துள்ளது.

கூட்டம் முடிவடைந்ததும் இருநாடுகளும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்தியாவும், வங்கதேசமும் 54 நதிகளின் நீரை பகிர்ந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.