'விவசாய நிலத்தில் விமான நிலையம் கட்டுவது என்ன மாதிரியான வளர்ச்சி?' – சீமான் சரமாரி கேள்வி

இருக்கும் விமான நிலையத்தில் பயணிப்பதற்கே பயணிகள் இல்லாத போது, 5000 கோடி செலவில் புதிய விமான நிலையம் அமைப்பது தேவையா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரை தூக்கிலிடக்கூடாது என கோரி கடந்த 2011 ம் ஆண்டு செங்கொடி என்கிற பெண் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில் செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செங்கொடியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” 30 ஆண்டுகால சட்டப் போராட்டம் அரசியல் போராட்டத்திற்கு பேரறிவாளன் விடுதலை ஆனார். மற்ற தமிழர்களும் விடுதலை செய்வதே ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளின் கடமையாக இருக்கிறது. அதுதான் செங்கொடி கையெழுத்திட்டு சென்ற பொறுப்பும் கடமையும் என கூறினார்.

பாரதிய ஜனதா தங்களுக்கு சாதகமான குற்றவாளிகளை மட்டுமே எளிதில் விடுதலை செய்கிறார்கள். எழுவரை விடுதலை செய்ய மாட்டோம் என  காங்கிரசை விட அதிகமாக உறுதியாக இருக்கிறார்கள். தமிழர்கள் உரிமை பெறக் கூடாது; எழுச்சி பெறக்கூடாது என்பதில் இரு கட்சிகளும் ஒரே நிலைபாட்டில் உறுதியாக உள்ளது எனக் கூறினார்.

image
புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை தற்போது என்ன என்று கேள்வி எழுப்பிய சீமான், இருக்கும் விமான நிலையத்தில் பயணிப்பதற்கே பயணிகள் இல்லாதபோது 5,000 கோடி செலவில் புதிய விமான நிலையம் எதற்கு? என்றார். மேலும் விளைநிலங்களை பறிப்பது தான் வளர்ச்சியா என்றும், எது வளர்ச்சி என்று பேசவே திமுக அமைச்சர்களுக்கு தெரியவில்லை என சாடினார். அரசு புறம்போக்கு நிலங்களில் எத்தனை விமான நிலையங்கள் வேண்டுமானால் கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் விளைநிலத்தில் கை வைத்தால் நாங்கள் கேள்வி கேட்போம் என்று கூறினார். அதுமட்டுமின்றி அதானி இந்த விமான நிலையத்தை கட்டினால் கூடுதலாக போராடுவோம் என்பதால், அரசே விமான நிலையத்தை கட்டி அதானியிடம் அதனை ஒப்படைக்க உள்ளது என்று சீமான் பேசினார்.

எல்லா நிலமும் விளை நிலம் அல்ல; விளைநிலத்திதை உருவாக்க பல தலைமுறைகள் இரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள் எனவும் கூறினார். விமானம் நிலையம் கட்டிய பிறகு எதையும் விளைவிக்க முடியாது. விளைநிலத்தில் விமான நிலையம் கட்டுவது என்ன வளர்ச்சி என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் துரைமுருகன் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சென்று பதவி வகிப்பவர்களை அப்படி இப்படி என்று மறைமுகமாக பேசுவதை விட செந்தில் பாலாஜி, சேகர் பாபு போன்றவர்களிடம் நேரடியாகவே பேசிவிடலாம் எனக்கு கூறினார். அவருக்கு முறையான அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கும்.

உதயநிதி ஸ்டாலினை தலைவராக ஏற்று அவருக்கு சேவை செய்யும் போது, துரைமுருகன் சொல்வதை  எவ்வாறு கேட்பார்கள் என்று கூறினார். இனத்தின் பரம்பரை எதிரி பாரதிய ஜனதா கட்சி என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் திராவிட கட்சிகள் என்ன வேடம் போடுகிறது என்று கணிக்க முடியவில்லை என கூறினார்.

மேலும் தம்பி விஜய் கூட மெர்சல் படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார் மூன்றிலும்  நல்லவராக தான் நடித்தார். ஆனால் திமுக எந்த நேரத்தில் என்ன வேலை செய்கிறது என்று கூற முடியவில்லை என கூறினார். நான்கு ஆண்டுகள் கட்சியை ஸ்டாலின் வழிநடத்திச் செல்லவில்லை கட்சி தான் அவரை எறும்பு போன்று அழைத்துச் சென்றது என்று நகைச்சுவையாக பேசினார். கட்சியின் தலைவராக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது பாராட்டுகள் வாழ்த்துக்கள்” என சீமான் கூறினார்.

இதையும் படிக்க: ‘திமுகவில் இருந்து வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன்’ – வைகோ பேச்சுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.