புதுடெல்லி: “பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் திட்டம் டெல்லியில் தோல்வியுறும்” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மது விற்பனைக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, பாஜக – ஆம் ஆத்மி கட்சி இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால், “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசை கவிழ்க்க பாஜக இதுவரை ரூ.6,300 கோடி செலவிட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ‘ஆபரேஷன் லோட்டஸின் ஒரு பகுதியாக பாஜக, ஆம் ஆத்மி உடைக்க முயற்சிக்கிறது’ என்றும் குறிப்பிட்டிருந்தார். என்றாலும், அனைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் தங்களுடன் தான் உள்ளனர் என்பதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பேசும்போது, “பாஜக எங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மாற தலா 20 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால் அவர்கள் இதற்கெல்லாம் ஆசைப்பட மாட்டார்கள். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்க பாஜக முயற்சித்தது. இந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் மூலம், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வை யாரும் விலைக்கு வாங்கவில்லை என்பதை டெல்லிவாசிகளுக்குக் காட்ட விரும்புகிறேன். எனது எம்.எல்.ஏ.க்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் திட்டம் டெல்லியில் தோல்வியுறும்” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.