சி.பி.எம்: விலகிய கொடியேரி பாலகிருஷ்ணன்… கேரள மாநில செயலாளரானார் கோவிந்தன் மாஸ்டர் – யார் இவர்?

கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சி.பி.எம் கட்சியை பொறுத்தமட்டில் முதல்வர் பதவியை விட பவர்ஃபுல் பதவியாக மாநில செயலாளர் பதவி பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு மாநில செயலாளராக பினராயி விஜயன் முதல்வர் ஆனதைத் தொடர்ந்து கொடியேரி பாலகிருஷ்ணன் மாநில செயலாளர் ஆனார். எஸ்.எஃப்.ஐ மாநில செயலாளர், கண்ணூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன். பின்னர் தொடர்ச்சியாக மூன்று முறை சி.பி.எம் மாநில செயலாளராக இருந்துவந்தார். கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இடையில் மருத்துவ சிகிச்சைக்காக சில மாதங்கள் விடுப்பு எடுத்துச் சென்றிருந்தார் கொடியேரி பாலகிருஷ்ணன்.

எம்.வி.கோவிந்தன் மாஸ்டர்

அப்போது ஏ.விஜயராகவன் பொறுப்பு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் மாநில செயலாளர் பதவியை சில மாதங்களுக்கு முன் ஏற்றுக்கொண்டார் கொடியேரி பாலகிருஷ்ணன். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சி தலைமையிடம் கூறியுள்ளார் கொடியேரி பாலகிருஷ்ணன். இதையடுத்து பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் திருவனந்தபுரம் ஏ.கே.ஜி சென்டரில் ஆலோசனை நடத்தி மாநில உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ள எம்.வி.கோவிந்தன் மாஸ்டரை மாநில செயலாளர் ஆக்க தீர்மானித்தனர்.

அதன்பிறகு நடந்த சி.பி.எம் மாநிலகுழு கூட்டத்தில் புதிய மாநில செயலாளராக எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சி.பி.எம் மாநில குழு வெளியிட்டது. 1991-ம் ஆண்டு முதல் சி.பி.எம் மாநில குழு உறுப்பினராக இருக்கிறார் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர். 1996 முதல் 2006 வரை தளிப்பறம்பு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆனார். கடந்த தேர்தலில் மீண்டும் எம்.எல்.ஏ ஆன கோவிந்தன் மாஸ்டர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். தலைமை ஆசிரியராக இருந்தவர். புத்தகங்களும் எழுதி உள்ளார். இப்போது சி.பி.எம் தேசிய குழு உறுப்பினராக உள்ளார் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர். கோவிந்தன் மாஸ்டரின் மனைவி சியாமளா கண்ணூர் மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார்.

சி.பி.எம் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகிய கொடியேரி பாலகிருஷ்ணன்

மாநில செயலாளராக பொறுப்பேற்ற எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் கூறும்போது, “கட்சி பலகட்டங்களிலும் பல பொறுப்புக்களை வழங்கியுள்ளது. இப்போது கட்சி தீர்மானத்தின் படி மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்படுள்ளது. கட்சி கொள்கையின்படி அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னேற்ற பாதையில் செல்வோம்” என்றார்.

எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ளார். சி.பி.எம் மாநில செயலாளராக எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், இதனால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.