தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நாயகிகளில் ஒருவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்ட் வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற குழந்தை இருக்கிறார். அவர் தெறி படத்தில் நடித்தவர். இந்தச் சூழலில் பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு மீனாவை கடுமையான சோகத்தில் தள்ளியிருக்கிறது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டுவந்து வித்யாசாகருக்கு அஞ்சலி செலுத்தி மீனாவுக்கு ஆறுதல் தெரிவித்தது.
இதனையடுத்து வீட்டுக்குள்ளேயே இருந்த மீனாவை அவரது தோழிகளான நடிகைகள் ரம்பா, சங்கீதா உள்ளிட்டோர் குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்து தங்களது ஆறுதலை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மீனா கடற்கரைக்கு சென்று வந்த புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகை மீனா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், மீனா சிறு வயதிலிருந்து தற்போதுவரை இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அந்த வீடியோவுடன், ‘வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது. வாழுங்கள். நம்மிடம் இருப்பது இந்த நிமிடம் மட்டுமே ’என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரது இந்த இன்ஸ்டா போஸ்ட் வைரலாகியுள்ளது.
முன்னதாக, உடல் உறுப்பு தான தினத்தையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், “உயிரைக் காப்பாற்றுவதைவிட பெரிய நன்மை எதுவும் இல்லை. உறுப்பு தானம் என்பது உயிரைக் காப்பாற்றும் உன்னதமான வழிகளில் ஒன்றாகும். இது ஒரு வரம், நோயுடன் போராடும் பலருக்கு இது இரண்டாவது வாய்ப்பு. நான் தனிப்பட்ட முறையில் அதை சந்தித்தேன். ஒரு நன்கொடையாளர் எனது கணவர் சாகருக்கு கிடைத்திருந்தால், எனது வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடியவராக அவர் இருந்திருப்பார். ஒரு நன்கொடையாளரால் எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இன்று எனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். உங்கள் பாரம்பரியத்தை வாழ வைப்பதற்கான சிறந்த வழி அதுதான். அன்புடன் மீனா சாகர்” என குறிப்பிட்டிருந்தார்.