விமர்சித்த தியேட்டர் அதிபரை மும்பைக்கே சென்று சந்தித்த விஜய் தேவரகொண்டா

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஹிந்தியில் முதன்முதலாக இயக்கிய லைகர் என்கிற படம் வெளியானது. பான் இந்தியா படமாக இது வெளியானாலும் கூட எந்த ஒரு மொழியிலும் வரவேற்பை பெற தவறியது. இத்தனைக்கும் இந்த படத்திற்காக படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா பல மாநிலங்களில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிகளில் மாறிமாறி கலந்து கொண்டார். ஆனால் இந்த படத்தை ஹிந்தியில் கரண் ஜோகர் தயாரிக்கிறார் என்பதற்காகவே ஏற்கனவே பாய்காட் லைகர் என்று ஒருபக்கம் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதேசமயம் இந்த எதிர்ப்பு குறித்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டபோது அவர் அதுபற்றின் அலட்டிக்கொள்ளாமல் அலட்சியமாக யார் புறக்கணிக்க போகிறார்கள் பார்க்கலாம்.. படத்தை பார்க்க விரும்புபவர்கள் வந்து பார்க்கட்டும் என்பது போன்று பேசினார். இவரது பேச்சு பாலிவுட்டிலேயே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் படம் வெளியான அன்றே அந்த படத்தின் ரிசல்ட் தெரிந்து விட்டதால் மும்பையில் உள்ள பிரபல மராத்தா மந்திர் சினிமா என்கிற தியேட்டரின் உரிமையாளரான மனோஜ் தேசாய் என்பவர் விஜய்தேவரகொண்டாவின் அலட்சியமான பேச்சும் ஆணவப்போக்கும் காரணமாகவே இந்த படம் ஹிந்தியில் தோல்வியை தழுவியுள்ளது என்று காட்டமாக விமர்சித்தார்.

“இந்த படத்தின் மீது நான் மிகப் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தேன். நிச்சயமாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் ஏற்கனவே பாய்காட் லைகர் என்கிற கோஷம் வலுவாக இருக்கும்போது அதை மேலும் தூண்டிவிடும் விதமாக அந்த படத்தின் ஹீரோவே பேசுவது எவ்வளவு மோசமானது என்பதை விஜய்தேவரகொண்டா உணரவில்லை. அவர் தேவரகொண்டா இல்லை.. அனகோண்டா” என்று விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில் படத்தின் ரிசல்ட் குறித்து கலக்கத்தில் இருக்கும் விஜய் தேவரகொண்டா, ஒரு மிகப்பெரிய தியேட்டர் அதிபர் இப்படி சாபம் கொடுப்பது போன்று பேசியதை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மும்பைக்கு கிளம்பி சென்ற அவர் சம்பந்தப்பட்ட தியேட்டர் அதிபரை நேரிலேயே சந்தித்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் நான் அலட்சியமாக பேசவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் நல்ல படங்களில் நடிப்பேன் என்றும் அவரிடம் கூறி அவரை சமாதானப்படுத்தியுள்ளார். இவர்கள் சந்திப்பு குறித்த புகைப்படத்துடன் இதுகுறித்த தகவல்கள் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.