பிரதமர் நரேந்திர மோடி மனிதநேயமிக்கவர் – குலாம் நபி ஆசாத் கருத்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடினமான மனிதர் என்று கருதினேன். ஆனால் அவர் மனிதநேயமிக்கவர் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஆசாத் கடந்த 26-ம் தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார். டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்தபோது குஜராத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வந்தனர். அவர்களது பேருந்தில் வெடிகுண்டு வெடித்துச் சிதறி பலர் உயிரிழந்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அவர் எனது அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரோடு நேரடியாக பேசும் மனதைரியம் எனக்கு இல்லை. எனது மாநிலத்தில் குஜராத் மக்கள் உயிரிழந்த குற்ற உணர்வில் அவரோடு பேச முடியவில்லை. என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். மூத்த அதிகாரிகள், நரேந்திர மோடியிடம் தகவல் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியை கடினமான மனிதர் என்றே கருதி வந்தேன். அவருக்கு மனைவி, குழந்தைகள் கிடையாது. அவர் கறாராக இருப்பார் என்றே நினைத்தேன். ஆனால் எனது கணிப்பு பொய்யாகிவிட்டது. அவர் மனிதநேயமிக்கவர், மிகச் சிறந்த பண்பாளர் என்பது எனக்கு தெரியவந்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது பிரதமரை மோசமாக விமர்சித்து கோஷத்தை உருவாக்கினர். இதை மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால் ராகுல் விரும்பினார்.

வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு சில நாட்கள் என்னால் தூங்க முடியவில்லை. எனது ரத்தத்தை சிந்தி காங்கிரஸின் வளர்ச்சிக்காக பாடுபட்டேன். ஆனால் என்னை கட்சியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்து விட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவை இப்போதும் மதிக்கிறேன். இதேபோல ராகுல் காந்தியையும் மதிக்கிறேன். அவரை மிகச் சிறந்த தலைவராக்க நான் உட்பட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் பகீரத முயற்சி செய்தோம். ஆனால் ராகுல் காந்தி எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. அவருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பகையும் கிடையாது. அவர் நல்ல மனிதர். ஆனால் சிறந்த அரசியல்வாதி கிடையாது. கடின உழைப்பாளி கிடையாது. இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.