தூத்துக்குடி: “8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “8 வழிச்சாலைத் திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்த்தது திமுக என்று அனைவருக்கும் தெரியும். இதில் நான் ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டியது இல்லை. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த பிரச்சினை இல்லை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இன்றைக்கு அவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதில், எந்த அரசியலும், எந்த தடங்கலும் இருக்கக்கூடாது” என்று அவர் கூறினார்.
முன்னதாக நேற்று மதுரையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “8 வழிச்சாலைத் திட்டம் என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு. உச்ச நீதிமன்றம் இந்த சாலையை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.