காவிரியில் வெள்ளப்பெருக்கு தொடரும் நிலையில், கரையோர பகுதிகளைச் சேர்ந்த 1,056 பேர் 11 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் காவிரியில் வெளி யேற்றப்படும் நிலையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் உள்ள பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதியில் குடியிருந்த 343 குடும்பங்களைச் சேர்ந்த 1,056 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி உள்ளிட்டோர் முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர்.
கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாசூர், மலையம்பாளையம், குரும்ப பாளையம், சத்திரப்பட்டி, கொளாநல்லி, ஊஞ்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால், விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் உள்ளிட்டவை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
இதனிடையே, “சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.