சென்னை: நடிகர் விஷ்ணு விஜய், நடிகை ரக்ஷிதா ஆகியோர் நடிப்பில் கலர்ஸ் தமிழில் “இது சொல்ல மறந்த கதை” என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 100 எபிசோடு கடந்து இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
வெற்றியான தொடர்களில் நடிப்பது பெரிய விஷயம் அல்ல. நாம் நடிக்கும் தொடர்களில் குறைந்த பட்சம் 2.5 வருடமாவது பயணிக்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள் என்று நடிகர் விஷ்ணு விஜய் கூறியுள்ளார்.
இது சொல்ல மறந்த கதை தொடரில் நடித்து வரும் விஷ்ணு விஜய் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
10 ஆண்டு நிறைவு
கேள்வி: உங்களுடைய சின்னத்திரை பயணம் குறித்து…
பதில்: எனக்கென்று குட்டி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கனா காணும் காலங்களில் தொடங்கிய எனது பயணம் 10 ஆண்டை நிறைவு செய்கிறது. வெற்றியான தொடர்களில் நடிப்பது பெரிய விஷயம் அல்ல. நாம் நடிக்கும் தொடர்களில் குறைந்த பட்சம் 2.5 வருடமாவது பயணிக்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். கல்லூரியின் கதை, ஆபீஸ், சத்யா போன்ற தொடர்கள் இந்த வரிசையில் அமைந்தது. இது சொல்ல மறந்த கதை தொடரும் 100 எபிசோடுகளை கடந்து விட்டது என்றார்.

அவர் ஒரு கிரியேட்டர்
கேள்வி: உங்களுக்கு பிடித்த ஆபீஸ் எது?
பதில்: பல ஆபீசில் நான் பணிபுரிந்தாலும், எனக்கு எப்போதும் பிடித்தது ஸ்டார் விஜய்யில் உள்ள நட்சத்திரம் ஆபீஸ் தான். கல்லூரியை முடித்து விட்டு வாழ்க்கையை தொடங்குவதற்கு நமக்கென்று ஒரு ஆரம்பம் வேண்டுமல்லவா? அந்த ஆரம்ப புள்ளி தான் நட்சத்திரம் ஆபீஸ். ஸ்டார் விஜய்யில் தொழிலாளியாக சேர்ந்து நான் இந்தளவுக்கு உயர்ந்துள்ளேன் என்றால் அதற்கு காரணம் நட்சத்திரம் ஆபீஸ் தான். இன்று அனைத்து சேனல்களிலும் தலைமையிடத்தில் இருப்பவர்கள் அனைவரும் அங்கிருந்து வந்தவர்கள் தான். பிரதீப் மில்ராய் பீட்டர் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியவர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ராஜ்குமார், நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட நிறைய பேர் அவரால் பயனடைந்துள்ளனர். பிரதீப் மில்ராய் பீட்டர் பொறுத்தவரை அவர் ஒரு கிரியேட்டர் என்றார்.

மெல்லிய நூல் போன்ற காதல் கதை
கேள்வி: இது சொல்ல மறந்த கதை தொடரில் எந்த மாதிரியான காதல் கதை இடம்பெற்றுள்ளது?
பதில்: வித்தியாசமான கதை களங்களில் நடிப்பது தான் எனதுஆசை. கனா காணும் காலங்கள் தொடரில் அம்மாஞ்சி போன்ற கதாபாத்திரத்திலும், ஆபீஸ் தொடரில் சாக்லேட் பாயாகவும், சத்யா தொடரில் எல்லோரையும் கவரக்கூடிய காதல் கதையாகவும் அமைந்தது. இது சொல்ல மறந்த கதை தொடரில் எப்போதும் உள்ள காதல் போன்ற காட்சிகள் இடம் பெறாது. இந்த காதலானது பரிணாமப்பட்டது. நடிகை ரக்ஷிதா ஒரு விதவை கதாபாத்திரம், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவிலான காதல் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஒரு உண்மையான காதலுக்கும், எதார்த்தமான காதலுக்கும் இடையே மெல்லிய நூல் போன்ற காதல் கதையாகும் என்றார்.
கற்றுக் கொடுக்கிறார்கள்
கேள்வி: இது வரை நீங்கள் நடித்த தொடர்களில் நீளமான வசனம் பேசி நடித்த தொடர் எது?
பதில்: ஒவ்வொரு தொடரின் போது, இயக்குநர்கள் ஏதாவது ஒன்றை எனக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். அதை நானும் கற்றுக் கொள்கிறேன். டிவி தொடரை பொறுத்தவரை வசனங்கள் ரொம்ப மனப்பாடம் செய்து நடிக்க வேண்டிய அவசியமில்லை. எதார்த்தமாக பேசினால் போதுமானது. சத்யா தொடரின் படப்பிடிப்பின்போது 10 நிமிட ஷூட்டிங்கை ஒரே டேக்கில் முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பீச்சில் நடத்திய படப்பிடிப்பின்போது மாலை 6 மணி ஆனதால் லைட்டிங் குறைந்தது. மறுநாள் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. அதனால் ஒரே டேக்கில் 10 நிமிடங்களில் நடித்து முடித்தோம் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=BSLmpKiwu44 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.