கொழும்பு :வெளிநாடு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சமையல் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் ஜூலை 9ல் உச்சகட்டத்தை எட்டியது. பொறுமை இழந்த மக்கள் கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் நுழைந்து சூறையாடினர்.
இதை தொடர்ந்து ஜூலை 13ல், அதிபர் கோத்தபய ராஜபக்சே தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.பின் அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் சென்று அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்தார். அங்கு 90 நாட்கள் அவர் வசிக்க தாய்லாந்து அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பவும், இங்கு அவர் பாதுகாப்புடன் வசிக்கவும் ஏற்பாடுகள் செய்யுமாறு, கோத்தபய தலைமையிலான இலங்கை பொதுஜன பெருமுன கட்சியினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்று, கோத்தபய நாடு திரும்ப ரணில் ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது.இதன்படி, கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் இருந்து இன்று இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானம் குறித்து தகவல் வெளியாகவில்லை. மேலும் அவர் அரசு பங்களாவில் தங்குவாரா அல்லது கொழும்பு நகரின் மிரிஹானா பகுதியில் உள்ள தன் சொந்த வீட்டில் தங்க உள்ளாரா என்பதும் தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement