சென்னை : பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல்நிலை தேறியுள்ளதாக அவரது குடும்பத்தினரும் ராதிகா உள்ளிட்டவர்களும் அப்டேட் தெரிவித்தனர்.
இயக்குநர் பாரதிராஜா
அழகான கிராமத்து கதைகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் பாரதிராஜா. இவரிடம் 16 வயதினிலே போன்ற உணர்வுப்பூர்வமான படங்களையும் சிகப்பு ரோஜாக்கள் போன்ற த்ரில்லர் கதைகளையும் ஒருசேர அனுபவித்தனர் ரசிகர்கள். இந்தப் படங்கள் வித்தியாசமான ஜானர்களில் வெளியானது.

சிறப்பான திரைக்கதை
ஆயினும் திரைக்கதையாலேயே ரசிகர்களை அதிகமாக கவர முடியும் என்ற சூட்சுமத்தை தெரிந்து வைத்திருந்தார் பாரதிராஜா. இவரது படங்களில் திரைக்கதை, காட்சி அமைப்புகள், நடிகர்கள் தேர்வு என அனைத்துமே மிரட்டும். தன்னுடைய கதைகளில் இயல்பான கதை மாந்தகர்களை உலவ விட்டிருப்பார்.

சப்பாணி கமல்ஹாசன்
அழகான கமல்ஹாசனை, சிறப்பான படங்களில் நடித்து வந்த நிலையிலேயே சப்பாணியாக காட்டும் துணிச்சல் பாரதிராஜாவிற்கு இருந்தது. அத்தகைய கதைக்களத்தில் அவரை உலவ விட்டதுடன், அந்தப் படத்தை வெற்றிப் படமாக்கவும் முடிந்தது. தொடந்து அழகான சிறப்பான படங்களை அதிகமாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார் பாரதிராஜா.

நடிப்பில் கவனம்
என் இனிய தமிழ் மக்களே என்று கைக்கூப்பலுடன் ரசிகர்களை எதிர்கொண்ட பாரதிராஜா, ஒரு கட்டத்தில் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார். இவரது நடிப்பில் சமீப காலங்களில் எங்க வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

தாத்தா கேரக்டர்
சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கேரக்டர், இப்படி ஒரு தாத்தா நமக்கெல்லாம் இல்லையே என்று எண்ணும்படியாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணமாக அமைந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

உடல்நிலை பாதிப்பு
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் பாரதிராஜா. மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்த வைரமுத்து, ராதிகா உள்ளிட்டவர்கள் அவர் தற்போது நலமாக உள்ளதாக அப்டேட் தெரிவித்தனர்.

சுசீந்திரன் அப்டேட்
இந்நிலையில் வள்ளிமயில் என்ற படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குநர் சுசீந்திரன், நேற்றைய தினம் பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்து பேசியதாகவும் இம்மாத இறுதியில் வள்ளிமயில் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

வள்ளிமயில் படம்
இன்றைய தினம் வள்ளிமயில் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 32 நாட்கள் திண்டுக்கல், தென்காசி, மதுரை போன்ற இடங்களில் நடைபெறவுள்ளதாகவும் தன்னுடைய அறிக்கையில் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.