* ஐஎன்எஸ் விக்ராந்தை கட்டும் பணி கடந்த 2005ல் தொடங்கியது. இதை கட்டி முடிக்க ரூ.20 ஆயிரம் கோடி செலவாகி இருக்கிறது.
* இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் நினைவாக, இந்த புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கும் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* தற்சார்பு இந்தியா கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த திறனை பெற்றுள்ள அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.
* 501 இந்திய நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட சிறுகுறு நிறுவனங்களின் பங்களிப்பால் இக்கப்பல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
* இக்கப்பலை கட்டுவதற்கான 26 ஆயிரம் டன் இரும்பை, ராணுவத்தின் மேற்பார்வையில் இந்திய பொதுத்துறை நிறுவனமான செயில் வழங்கி இருக்கிறது.
* கப்பலின் மொத்த நீளம் 262 மீட்டர். அகலம் 62 மீட்டர்.
* மணிக்கு 29 நாட்டிகல் மைல் வேகத்தில் பயணிக்கும். 7,500 நாட்டிகல் மைல் இடைவிடாமல் பயணிக்கும் திறன் படைத்தது.
* கப்பலில் மொத்தம் 2,200 அறைகள் உள்ளன. இதில், ஒரே நேரத்தில் 1,600 வீரர்கள், பணியாளர்கள் தங்க முடியும். பெண்களுக்கு தனி அறைகள் உள்ளன.
* ஒரேநேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும். மிக்-29கே போர் விமானங்கள், காமோவ்-30, எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்கள் இதில் இடம் பெற உள்ளன.
* இக்கப்பலில் போர் விமானங்களை இறக்கும் சோதனையை வரும் நவம்பரில் தொடங்கி, 2023 மே வரையில் கடற்படை செயல்படுத்தும்.
* கப்பலை கட்டும் பணியில் நேரடியாக 2 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 13 ஆயிரம் தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.
* கப்பலுக்கான வடிவமைப்பை இந்திய கடற்படை பிரிவு செய்து கொடுத்துள்ளது.
* கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் 76 சதவீதம், இந்தியாவில் உருவாக்கப்பட்டவை.
* ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவுடன் இணைந்து, இந்திய கடற்படைக்கு ஐஎன்எஸ் விக்ராந்தும் பலம் சேர்க்கும்.
* இந்திய -பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடலில் இந்தியாவின் வலிமையை இது பறைசாற்றும்.
* இந்த கப்பலை முழுவதுமாக நடந்து சுற்றி வந்தால் 12 கிமீ தூரம் கணக்காகும்.
* கப்பலில் உள்ள ஜெனரேட்டர் மூலமாக 5 ஆயிரம் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.
* இக்கப்பல் மொத்தம் 18 அடுக்குகளை கொண்டது.
* கப்பலின் மொத்த எடை 45 ஆயிரம் டன்.
* நவீன சிகிச்சை பிரிவு
நவீன மருத்துவ சாதனங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவு, 2 அறுவை சிகிச்சை மையங்கள், பிசியோதெரபி பிரிவுகள், பரிசோதனை கூடங்கள் இடம் பெற்றுள்ளன.
* காங். அரசின் பங்களிப்பை மோடி அபகரிக்கிறார்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘கடந்த 1999ம் ஆண்டு முதல் விக்ராந்த் கப்பலை தயாரிப்பதற்கான முயற்சிகள் நடந்துள்ளன. இதில், பல்வேறு ஒன்றிய அரசுகள் ஈடுபட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதமே இக்கப்பலை அப்போதைய காங்கிரஸ் அரசின் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தொடங்கி வைத்தார். இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன (வீடியோ வெளியிட்டுள்ளார்). ஒரு வித்தியாசம்தான் இப்போது உள்ளது. இக்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது, பாஜ ஆட்சியில் இருக்கிறது. இக்கப்பலை உருவாக்கிய கடந்த கால அரசுகளின் பங்களிப்பு, விஞ்ஞானிகள், இந்திய கடற்படை, கப்பலை கட்டிய தொழிலாளர்களின் கூட்டு முயற்சியின் பலன்கள் அனைத்தையும் வழக்கம் போல், தனது இரட்டை வேடத்தால் பிரதமர் மோடி அபகரிக்க பார்க்கிறார். இந்த கப்பலை உருவாக்கியதற்கும், பாஜ அரசுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை,’ என தெரிவித்தார்.
* தானியங்கி சமையல் கூடம்
ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் சாப்பிடக் கூடிய உணவை தயாரிக்கும், தானியங்கி சமையல் கூடமும் உள்ளது. இதில் உள்ள சமையல் இயந்திரங்கள் ஒரு நாளைக்கு 16 ஆயிரம் சப்பாத்தி, 6 ஆயிரம் இட்லிகளை சுட்டுத் தள்ளும்.
* ராகுல் பாராட்டு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் டிவிட்டர் பதிவில், ‘ஐஎன்எஸ் விக்ராந்தின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கிய இந்திய கடற்படை, கடற்படை வடிவமைப்பு பணியகம் மற்றும் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தின் பல ஆண்டு கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள். போர்க்கப்பல் விக்ராந்த், இந்திய கடல்சார் பாதுகாப்பிற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.