ஸ்ரீ நகர்: போராட்டங்கள் அத்துமீறும் போதும், கலவரங்கள் ஏற்படும் போதும், கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் துப்பாக்கிகள் மூலமாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகின்றனர். சில நேரங்களில் இதை எடுத்து, போலீசார் மீதே போராட்டக்காரர்கள் வீசுவது உண்டு. இனிமேல், இதுபோல் நடக்க வாய்ப்பில்லை. காரணம், வானத்தில் இருந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதற்கான டிரோன்களை எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) உருவாக்கி இருக்கிறது.
போராட்டம், வன்முறை நடக்கும் இடங்களில், இந்த டிரோன்களை அனுப்பி கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்கலாம். இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘டிரோன்களில் அமைக்கப்பட்டுள்ள லாஞ்சர்கள் மூலம், கண்ணீர் புகை குண்டுகளை பூமியை நோக்கி வீச முடியும். சட்டம் ஒழுங்கை காப்பதற்காக காவல்துறை பயன்பாட்டுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம், தேகன்பூரில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டது,’என தெரிவித்தார். அந்த சோதனை குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டார்.